சனி, 15 மே, 2010

சிந்தனை

செல்வாக்கும் ஆள்பலமும் சிந்தும் பணச்செருக்கும்
நில்லாதே எந்நாளும் நீக்கமற -பல்குபுகழ்
செந்தமிழில் நூல்பலவும் செய்வதனால் முன்நிற்கும்
சிந்தனையால் பெற்ற சிறப்பு!

(உரத்த சிந்தனை - ஏப்ரல் 2010)

வெள்ளி, 14 மே, 2010

முதுமையும் வாழ்க்கை சுமையும் !

நம்சொல்லைக் கேளார் நடப்பதெதும் கூறார்நாம்
செம்மையுறச் சேர்த்தபொருள் போக்கிடுவார் - தம்பீ
உமிக்குவியில் ஓரரிசி கண்டுவந்தால் என்றும்
சுமையன்று வாழ்வு சுகம்!

(அமுதசுரபி - பிப்ரவரி 2010)

நாட்டுப் பற்று

தன்னலம் பேணாமல் தன்குழந்தைக் கெவ்வகையும்
இன்னலெதும் நேராமல் ஈன்றளித்துப் - பொன்னெனவே
ஊட்டி வளர்த்த உனைப்பெற்ற தாய்போன்ற
நாட்டிற்கே உன்னைக் கொடு!

(முல்லைச்சரம் - ஏப்ரல் 2010)

வியாழன், 13 மே, 2010

வெற்றியும் தோல்வியும்

(வெண்செந்துறை)

இயலா தெதுவும் இலையென் றோர்ந்து
முயன்றுநீ செய்தால் முடிந்திடும் வெற்றியில்!
தோல்வியைக் கண்டு துவண்டு விழாதுநீ
மேலும் உழைத்திடில் மேன்மை அடையலாம்!

(நற்றமிழ் - மார்ச் 2010)

கொடுமை!

அப்பாவி மக்கள் அளவிறந்து வீழ்ந்திட்டார்
துப்பாக்கிக் குண்டுகளே தூர்த்தனவாம் - தப்பேதும்
கிஞ்சித்தும் செய்தறியாப் பிஞ்சுகளும் மாய்ந்தவிதம்
நெஞ்சில் எரியும் நெருப்பு!

(அமுதசுரபி - ஆகஸ்ட் 2009)

சமையல்

உப்பும் புளிப்பும் உறைப்பும் இனிப்பும்வாய்
சப்பென்றில் லாமல் சரியாக - எப்பொழுதும்
ஒன்றாய் அமர்ந்துண்ண உன்கை மணம்கமழ
நன்றாகச் செய்க நயந்து!

(அமுதசுரபி - ஜூலை 2009)

புதன், 12 மே, 2010

வெட்டாதே மரங்களை !

தினந்தோறும் எங்கேனும் தீதிலாத் தோப்பை
மனம்போல் அழிக்கின்றார் மாந்தர் - அனல்போலச்
சுட்டெரிக்கும் கோடையில் சொட்டுநீர் கிட்டாது
பட்டுவிடு மேஇப் புவி!

(திருக்குறள் அதிகாரம் 50 ல் பயின்று வரும் சீர்களில் தேமாச்சீர் ஒன்றனை ஏழாம் சீராகக் கொண்டு எழுதப் பெற்றது; பன்மலர் மே 2010 )

பெண்ணின் பெருமை

ஆணுக் கிணையாக ஆற்றல்பல பெற்றுள்ளார்
வீணாய் எதிர்த்திட வேண்டாவே - நாணுடைமை
மண்போல் பொறையுடைமை மாந்தர் இனம்காக்கும்
பெண்மணியைக் கண்மணியாய்ப் பேண்!

(மீண்டும் கவிக்கொண்டல். ஏப்ரல் 2010)

வெயில்

சாலை மரநிழலில் சாய்வதொன் றேசுகம்
காலைமுதல் கொட்டும் வியர்வையே - மேல்முழுதும்
ஈட்டியால் குத்திடினும் ஏற்றிட லாமிங்கே
வாட்டி எடுக்கும் வெயில்!

(பொதிகை மின்னல், மே 2010)