வெள்ளி, 31 டிசம்பர், 2010

உழைப்பாளருக்கு உதவு

காலை மாலை காட்டில் மாடாய்
வேலை செய்வோர் ஏற்றம் காண
நாளும் செய்வீர் நன்று!

(ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
"நற்றமிழ்" 15-05-2010)

உலகம் நம் உள்ளங்கை மேல்!

அறிவியல் வானியல் ஆன்மிகம் ஆடல்
பொறியியல் ஆண்பெண் பொருத்தம் - முறையாய்ப்
பலகற்றுத் தேர்ந்துநற் பண்டிதர்கள் ஆனால்
உலகம்நம் உள்ளங்கை மேல்!

(வெண்பா விருந்து - "முல்லைச்சரம்" - ஜூன் 2010)

கல்வி

திருத்தமாய்க் கற்றால் தெளிவு பிறக்கும்
பெருத்திடும் ஐயமெலாம் தீரும் - பொருத்தம்
இசைக்கென்றும் வேண்டுமாம் என்பதுபோல் கல்வி
நசையுடன் கற்றல் நலம்!

(வெண்பாப் போட்டி 109- திருக்குறள் அதிகாரம் 51 இல்
பயின்றுவரும் புளிமாச்சீர்களில் ஒன்றனை மூன்றாம்
சீராகக் கொண்டு எழுதியது- "பன்மலர்" -ஜூன் 2010)

உழைப்பாளி வாழ்வை உயர்த்து!

நமக்காகப் பாடுபடும் நல்லவர்கள் நம்மைப்போல்
சமமாக வாழ்தல் சரியாம் - சுமையாய்
இழைக்கும் கொடுமைகளை இன்னல்களை நீக்கி
உழைப்பாளி வாழ்வை உயர்த்து!

(வெண்பா விருந்து - "மீண்டும் கவிக்கொண்டல்"-மே 2010)

கோவைக்குப் போகலாம் வா!

செம்மொழிக்கு மாநாட்டைச் சீராய் நடத்துகின்றார்
எம்தமிழர் பாரெல்லாம் ஏத்துகின்றார் - அம்மம்மா
நாவுக்கும் நற்செவிக்கும் நல்விருந்தைச் சேர்ந்தளிப்பார்
கோவைக்குப் போகலாம் வா!

(வெண்பா விருந்து - "மீண்டும் கவிக்கொண்டல்"-சூன் 2010)

புதன், 29 டிசம்பர், 2010

யானைக் குளியல்

ஒன்றுக்கு மூவர் ஒருகுளியல் போடுதற்கு
நின்றே களித்திடும் நீள்கொம்பன் - நன்றாய்ச்
சறுக்கு மரமாடச் சாய்ந்துகை நீட்டிப்
பொறுப்புடன் நீரா டிடும்!

(யானையை மூன்றுபேர் சேர்ந்து குளிப்பாட்டுவது
போன்ற ஓவியத்திற்குப் பாட்டு. ஓவியப்பாட்டு-24
உரத்தசிந்தனை - டிசம்பர் 2007)

வெள்ளி, 17 டிசம்பர், 2010

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

பல்கலை வித்தகர் பயின்றது சட்டம்
தொல்லைய ரானார் வெள்ளைய ருக்கே
நூல்களைச் செல்வமாய் மதித்த அறிஞர்
கால்கோள் கண்டவர் தொழிற்சங் கத்தில்
சிறைபல சென்றவர் குறைகளை எதிர்த்து
நிறைதரும் பொதுவுடை மையெனும் கருத்தர்
சிந்தனைச் சிற்பிசிங் கார வேலர்
இந்த மண்ணில் பிறந்ததெம் பெருமையே!

(ம.சிங்காரவேலர் 150-ஆவது பிறந்த நாள் 18.2.2009
"செவ்வானம்"-பாமாலை- கவிதைத் தொகுப்பு-மே 2009-
பாவலர் அசோகா சுப்பிரமணியன்,புதுச்சேரி)

வியாழன், 16 டிசம்பர், 2010

விண்ணப்பம் ஏற்றிடுவாய்!

பொற்பாதம் நெஞ்சமுறப் பொழுதெலாம் உனையெண்ணிப்
புலம்பிடும் சிறிய பிள்ளை
புடவையெழில் சேயெனவே போர்த்தியருள் செய்திட யான்
புண்ணியம் என்ன செய்வேன்?

இற்றுவிழும் இடையுடனே ஈசனுடன் நடனமிடும்
என்னம்மை நின்கருணையால்
இச்சை சுகம் உறவு பகை எனும் பெரிய பந்தத்தை
என்றைக்கு உதறி நிற்பேன்?

சொற்கேட்டு சம்பந்தன் சுடரறிவைத் தூண்டியநற்
சோதியே தாய் நெஞ்சமே
சொல்லொணாத் துயர் நெஞ்சைச் சுக்கலாய் ஆக்குமுனம்
சுகவிரல்க ளால்வருட வா!

கற்றவர்கள் சங்கமிடும் கவின்மதுரை மாநகரில்
கண்கொள்ளாக் காட்சி நீயே
கவனமுடன் இச்சிறுவன் விண்ணப்பம் ஏற்றிடுக
கருணை மீனாட்சி உமையே!

("உரத்தசிந்தனை" 26-ஆம் ஆண்டுமலர், பிப்ரவரி 2010)

புதன், 15 டிசம்பர், 2010

தாய்மை உளமகிழுந் தான்!

கருவில் சுமந்து கணக்கற்ற இன்னல்
வருத்தினும் தாய்மனம் வாடாள் - உரமுடன்
சேயின் நிலையுர்ந்து செம்மாந்து நிற்குங்கால்
தாயின் உளமகிழுந் தான்!

("உரத்த சிந்தனை" - செப்டம்பர் 2010, வெண்பாப் போட்டியில்
முதல் பரிசு பெற்றது.)

பாரதி நெய்துவைத்த பா!

மானத்தைக் காக்கும் மறக்குணத்தை ஊட்டிடும்
தானம் தவம்பற்றி ஓதிடும் - பேனாவோ
ஊரறியும் தெய்வமதன் ஓரெழுத்தும் தெய்வமெனும்
பாரதி நெய்துவைத்த பா!

("தமிழரின் மனித நேயம்" செப்டம்பர், 2010)

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சிங்கமுகி அன்னை ஜெகத்தினைக் காத்திடுவாள்!

கர்ச்சிக்கும் சிங்கத்தின் பிடரிமயிர் சிலிர்ப்படையக்
கால் பூமி உதைத்து நிற்க
கற்றைமுடி வால் எழும்ப இருவிழிகள் தீயுமிழக்
கோறைப்பல் நா சுழலவும்
கர்ப்பமது உலகுடையாள் காற்சிலம்போ எதிரொலிக்கக்
கையில் திரி சூலமேந்தி
கதை வில் வாள் எனுமாயுதம் கண்ணிமைக்க முன் வந்து
கரங்களிலே சுழன்றாடிட

பர்வதமலை போலுயர்ந்து நாகங்கள் குடை பிடிக்கப்
பயங்கரியாய் சிங்கமுகியாய்ப்
பாரதிர நகையொலித்துப் பாவிகளை சம்கரிக்கும்
பராசக்தி கூறானவள்

துர்குணத்தைப் போக்கியருள் பிரத்தியங்கரா தேவி
துடிப்பான மாகாளியாம்
தொண்டர்களும் பெண்டிர்களும் தூயமனத் துடனன்னை
திருவடிகள் பணிந்துய்குவாம்!

(ஒரேநாடு-ஆகஸ்ட்டு ௨0௧0)

சனி, 31 ஜூலை, 2010

ஆடித் தபசு!

சங்கர லிங்கத்தின் சப்ரமஞ்சம் சாய்ந்தாள்
சந்தேகத் துடனெழுந்தாள்
சரியான உயர்பெருமை தன் கணவனுக்கா அன்றித்
திருமகள் மார்புறைவனுக்கா

எங்கறிவேன் இதற்கு விடை என்றயர்ந்து கோமதியும்
ஏதேதோ யோசித்தனள்
இடப்பக்கம் இடம் தந்த சிவபெருமானா அன்றி
என் அண்ணன் நாராயணனா

செங்கமல விழியன்னை புன்னை வனத்திலொரு
காலூன்றித் தவம் செய்தனள்
சங்கரன் நாராயணன் இருபேரும் ஒன்றென்றே
சரிபாதியாய் நின்றனன்

மங்கலமாம் இக்காட்சி மனக்குளிர்ந்தாள் ஆவுடைத்தாய்
மங்கையர்கள் போற்றும் ஆடி
மாவிளக்கு பூசையுடன் சங்கரன் கோவில் சென்று
மனமுருக வேண்டி நிற்போம்!

சனி, 15 மே, 2010

சிந்தனை

செல்வாக்கும் ஆள்பலமும் சிந்தும் பணச்செருக்கும்
நில்லாதே எந்நாளும் நீக்கமற -பல்குபுகழ்
செந்தமிழில் நூல்பலவும் செய்வதனால் முன்நிற்கும்
சிந்தனையால் பெற்ற சிறப்பு!

(உரத்த சிந்தனை - ஏப்ரல் 2010)

வெள்ளி, 14 மே, 2010

முதுமையும் வாழ்க்கை சுமையும் !

நம்சொல்லைக் கேளார் நடப்பதெதும் கூறார்நாம்
செம்மையுறச் சேர்த்தபொருள் போக்கிடுவார் - தம்பீ
உமிக்குவியில் ஓரரிசி கண்டுவந்தால் என்றும்
சுமையன்று வாழ்வு சுகம்!

(அமுதசுரபி - பிப்ரவரி 2010)

நாட்டுப் பற்று

தன்னலம் பேணாமல் தன்குழந்தைக் கெவ்வகையும்
இன்னலெதும் நேராமல் ஈன்றளித்துப் - பொன்னெனவே
ஊட்டி வளர்த்த உனைப்பெற்ற தாய்போன்ற
நாட்டிற்கே உன்னைக் கொடு!

(முல்லைச்சரம் - ஏப்ரல் 2010)

வியாழன், 13 மே, 2010

வெற்றியும் தோல்வியும்

(வெண்செந்துறை)

இயலா தெதுவும் இலையென் றோர்ந்து
முயன்றுநீ செய்தால் முடிந்திடும் வெற்றியில்!
தோல்வியைக் கண்டு துவண்டு விழாதுநீ
மேலும் உழைத்திடில் மேன்மை அடையலாம்!

(நற்றமிழ் - மார்ச் 2010)

கொடுமை!

அப்பாவி மக்கள் அளவிறந்து வீழ்ந்திட்டார்
துப்பாக்கிக் குண்டுகளே தூர்த்தனவாம் - தப்பேதும்
கிஞ்சித்தும் செய்தறியாப் பிஞ்சுகளும் மாய்ந்தவிதம்
நெஞ்சில் எரியும் நெருப்பு!

(அமுதசுரபி - ஆகஸ்ட் 2009)

சமையல்

உப்பும் புளிப்பும் உறைப்பும் இனிப்பும்வாய்
சப்பென்றில் லாமல் சரியாக - எப்பொழுதும்
ஒன்றாய் அமர்ந்துண்ண உன்கை மணம்கமழ
நன்றாகச் செய்க நயந்து!

(அமுதசுரபி - ஜூலை 2009)

புதன், 12 மே, 2010

வெட்டாதே மரங்களை !

தினந்தோறும் எங்கேனும் தீதிலாத் தோப்பை
மனம்போல் அழிக்கின்றார் மாந்தர் - அனல்போலச்
சுட்டெரிக்கும் கோடையில் சொட்டுநீர் கிட்டாது
பட்டுவிடு மேஇப் புவி!

(திருக்குறள் அதிகாரம் 50 ல் பயின்று வரும் சீர்களில் தேமாச்சீர் ஒன்றனை ஏழாம் சீராகக் கொண்டு எழுதப் பெற்றது; பன்மலர் மே 2010 )

பெண்ணின் பெருமை

ஆணுக் கிணையாக ஆற்றல்பல பெற்றுள்ளார்
வீணாய் எதிர்த்திட வேண்டாவே - நாணுடைமை
மண்போல் பொறையுடைமை மாந்தர் இனம்காக்கும்
பெண்மணியைக் கண்மணியாய்ப் பேண்!

(மீண்டும் கவிக்கொண்டல். ஏப்ரல் 2010)

வெயில்

சாலை மரநிழலில் சாய்வதொன் றேசுகம்
காலைமுதல் கொட்டும் வியர்வையே - மேல்முழுதும்
ஈட்டியால் குத்திடினும் ஏற்றிட லாமிங்கே
வாட்டி எடுக்கும் வெயில்!

(பொதிகை மின்னல், மே 2010)

சனி, 3 ஏப்ரல், 2010

சுமை
சாலையின் குறுக்கே மாட்டு வண்டி

எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது

" ஆரன் " அடியுங்கள் என்றாள் என்னவள்

மாட்டின் சுமை குறையட்டும் என்று

மௌனமாய் இருந்தேன் நான்!

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

சமாதானமே நல்ல தீர்வு!

முப்பத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன ஜனவரி இருபத்தொன்பது இரண்டயிரத்துப் பத்துடன் நான் வழக்கறிஞர் பணி தொடங்கி! எவ்வளவோ வழக்குகள்; எப்படியெல்லாமோ தீர்ப்புகள். அவற்றுள் பாதிக்கு மேற்பட்ட பிரச்சினைகளை சமாதானமாகவே தீர்த்திருக்க முடியும். ஏனோ கட்சிக்காரர்கள் நீதி மன்றத்தை அணுகி நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகிறார்கள்!

சனி, 2 ஜனவரி, 2010

வரலாற்றில் அண்ணா- நூல் வெளியீடு

இன்று மாலை 6 மணிக்கு நண்பர் வழக்கறிஞர் பின்னலூர் விவேகானந்தன் எழுதிய "வரலாற்றில் அண்ணா " என்னும் நூல் சென்னை பாம்க்ரோவ் ஓட்டலில் முன்னாள் நீதிபதி பு.இரா .கோகுலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. திரு.இராம.வீரப்பனிடமிருந்து முதல் படியை முன்னாள் நீதிபதி பொன்.பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்து வாழ்த்துரைத்தார். திருவாளர்கள் கயல் தினகரன் ,மீ.அ. வைத்தியலிங்கம் ,கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் ,ஆகியோர் வாழ்த்தினர். நூலகவியல் அறிஞர் ந.ஆவுடையப்பன் வரவேற்புரை நல்கினார். அண்ணாவைப் பற்றிய அறிய பல தகவல்களை அறிய முடிந்தது இந்த விழாவில். அவரது எளிமை , மாற்றாரைப் புண்படுத்தாமல் பேசும் பாங்கு, அரசியல் நாகரிகம் , பேச்சு வன்மை போன்ற நல்ல பல செய்திகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.

வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஆங்கிலப் புத்தாண்டில் அனைவர்க்கும் அன்பும், அமைதியும்,ஆனந்தமும் அளவிலாது அமைய
வாழ்த்துகிறேன்!
-அரிமா இளங்கண்ணன்