வியாழன், 20 ஜனவரி, 2011

பொங்கலைப் போற்று

நேரிசை ஆசிரியப்பா

எங்கள் உழவர் இடைவிடா துழைத்துத்
தங்கமாய் நெற்கதிர் தந்துளார்
தைத்திரு நாளில்
வைத்து மகிழ்வர் பொங்கலைப் போற்றவே!

("நற்றமிழ்"-உ0சு உ-சுறவம் 15.01.2011)

வெள்ளி, 14 ஜனவரி, 2011

கிளிநொச்சி

புலிவாலைத் தீண்டுவதால் போர்வெற்றி யாமோ
கிலிபிடித்தே வீழ்ந்திடுவீர் கீழே - மலிவாய்க்
களியுவகை கொள்ளாதீர் காலமது காட்டும்
கிளிநொச்சி சிங்களர்க்குக் கூற்று!

(6.10.2008 மாலை 6.10 இ)

தேர்ந்தாய்ந்து பார்

கருப்பைச் சிவப்பென்றும் காளை பசுவென்றும்
கருத்திலா மூடர் கதைப்பர் - திருத்தமுடன்
ஓர்ந்துகண் ணோடாது நலலவை தீயவை
தேர்ந்தாய்ந்து பார்த்துத் தெளி!

("பன்மலர்"-வெண்பாப் போட்டி-92-நவம்பர்,2008)

வன்முறையை வேரறுப்போம்

குண்டெறிதல் தீவைத்தல் கொல்லல் இறக்கமின்றி
கண்டபடி பேயாட்டம் ஆடிடுதல் - உண்டவீட்டில்
கன்னம்வைத் தோடல் கயவர்களின் தீச்செயலாம்
வன்முறையை வேரறுப்போம் வா!

(21.9.2008 இரவு 12.30 இ)

பாரதி

பாட்டுக் கொருபுலவன் பாரதியின் பாட்டெல்லாம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லனவாம் - கேட்பதுடன்
எத்துணைநாள் கற்றாலும் இன்பம் செவிநிறையும்
தித்திக்கும் செந்தமிழ்த் தேன்!

(29.9.2008 காலை 11.55 அ)

அணுசக்தி ஒப்பந்தம்

அணுசக்தி ஒப்பந்தம் சேதுகடல் திட்டம்
பிணக்கின்றிச் செய்தல் பெருமை - இணக்கமாய்
இந்தியர் ஒன்றாய் இணைந்திடில் என்றும்
எந்தத் தடையுமி ராது!

("பொதிகை மின்னல்" - நவம்பர் 2007)

வீட்டுக்கொரு வீரர்

உள்நாட்டில் வன்முறைகள் ஓநாய்போல் அன்னியர்கள்
கள்ளத் தனம் செய்யக் காத்துள்ளார் - துள்ளியெழு
வீட்டுக்கோர் ஆணென்றே வீர முரசரைந்து
நாட்டின் நலனையே நாடு!

("முல்லைச்சரம்" - ஜூலை 2010)