வியாழன், 28 ஜனவரி, 2016

பெண் என்னும் பெருந்தகை

அண்ணன் தம்பி அக்காள் தங்கை
கண்ணுக்கினிய கணவன் பெற்றோர்
உற்றார் உறவினர் ஊரார் அயலார்
சுற்றம் நட்பும் சூழ மகிழ்ந்து
கண்ணாய்க் கல்வியைக் கற்றுப் பகிர்ந்து
திண்ணிய நெஞ்சுடன் வாழ்வை அமைத்து
வீட்டையும் நாட்டையும் விளக்கொளி யாக்கும்
நாட்டம் கொண்டவள் பெருந்தகை யாமே!

(18.2.2015 புதன் காலை 11.25)
(இடுகை 28.1.2016 வியாழன் மாலை 5-14)

பாரதி போற்றிய பெண் (முதல் பரிசு )

தாய்மையும் வீரமும் தக்கநற் கல்வியும்
ஆய கலைகளில் ஆர்வமும் - நேயமாய்
சீரதிகம் பெற்றுச் சிறப்புடன் நிற்பவளே
பாரதி போஸ்னிய பெண்!

(இலக்கியச் சோலை. மார்ச் 2015.பக்கம் 85
வெண்பாப் போட்டி முதல் பரிசு )
(இடுகை 28.1.2016 மாலை 4.55)

புதன், 27 ஜனவரி, 2016

காவல்

பட்டப் பகலில் படுகொலைகள் குத்துவெட்டு
கட்டுப் படுத்தும் கருத்தின்றி - வெட்டியான்கள்
காவல் புரிதலெனும் கண்துடைப்பை இன்னுமோ
யாவர்தாம் நம்புவார்கள் இன்று?

(16.2.2015 ஞாயிறு பகல் 2.15)
(இடுகை 28.1.2016 பகல் 12.15)

திரு. இல.கணேசன் பிறந்தநாள் வாழ்த்து

அரசாங்கப் பணியில் இருந்தீர்கள்
     அன்புடன் சங்கம் அழைக்கக்
கரங்கோத்துப் பணிகள் செய்தீர்களா
     கட்டுப்பாட் டுடனே திகழ்ந்தீர்
உரங்கொண்ட அரசிய வாற்றில்
     உறுதியாய் நீந்த லானீர்
சிரம்போற்றும் 'பொற்றாமரை மரை'யைச்
     செதுக்கினீர் வாழ்க! வாழ்க!

      (வெண்பா)

நானிலம் போற்றிடவே நாற்பத்தைந் தாண்டுகள்
தானினிய சேவை தந்துவிட்டார் - தேனினிய
நற்றமிழ்ச் செல்வர் இலகணேச னார்பிறந்த
வெற்றித் திருநாளில் வாழ்த்து!

(16-2-2015 காலை 7.45)
(இடுகை 28.1.2016 பகல் 12.04)

திங்கள், 25 ஜனவரி, 2016

இயற்கை

காடழித்தோம் ஆழக் கடலகழ்ந்தோம் குன்றுடைத்தோம்
கேடுமிக வான்வெளிக்குக் கிட்டவைத்தோம் - பாடின்றி
ஓய்ந்திருக்கும் நல்லியற்கைக்(கு) ஊறுபல செய்திட்டால்
பாய்ந்துவரும் பேரழிவைப் பார்!
(14.2.2015 சனி இரவு 10 மணி)
(வெளியானது "முல்லைச்சரம்" ஏப்ரல் 2015 பக்கம் 63. சரம்49.மலர்9.தொடக்கம் 15.8.1966)

புரசை வரதராசப் பெருமாள் - 15

பல்லாண்டு பாடப் பரந்தாமன் இன்புற்றே
எல்லா நலமும் இனிதருள்வான்- தொல்லுலகில்
நாரா யணன்பாதம் நாளும் பணித்திட்டால்
வாராதே என்றும் இடர்.

(13-2-2015 வெள்ளி மாலை 6-40. கோவில் )
(இடுகை 25-1-2016.மாலை 7-05)

புரசை வரதராசப் பெருமாள் - 14

தந்தைதிருப் பல்லாண்டும் தம்கோதை ப
பாவவையும்
சிந்தை மகிழ்வுறவே செப்பிடுங்கால் - பந்தை
வரதரா சப்பெருமான் வற்றா தருளப்
புரசைவாக் கம்கோயில் போ!
(13-2-2015 வெள்ளி. மாலை  6.40. கோயில்)
(இடுகை 25.1.2016 திங்கள் மதியம் 3.29)

வெள்ளி, 22 ஜனவரி, 2016

ஆகா! என்னபொருத்தம்!

பெண்பார்க்கச் சென்றார்கள் சாத கத்தில்
       பெரும்பகுதி பொருந்தவில்லை என்ற பின்னும்
கண்பார்த்துக் காடுகரை வீடு சொத்து
    கணக்கற்ற  நகைநட்டும் உண்டாம் மற்றும்
அண்ணன்மார் அக்காளென் றில்லை மென்றே
    அறிந்தவுடன் 'ஆகாகா!' பொருத்தம் பூத்தும்
திண்ணமாக உள்ளதென்றார் திரும ணத்துத்
.   தேதியையும் உடன்குறித்தார் உலகம் இஃதே!

(14-2-2015.சனி. இரவு 10.40 )
(இடுகை. 23.1.2016.பகல் 1-15)

வியாழன், 21 ஜனவரி, 2016

வெளிநாட்டு வங்கிகளில் நம் பணம்

வெளிநாட்டு வங்கிகளில் வீணாய்க் கிடந்தே
புழுங்கும் பணத்தைப் புழக்கத் - தெளிவான 
திட்டமுடன் செய்தால் தீரும் கடன்தொல்லை
எட்டிவிடும் நல்லிலக்கை நாடு.

(26-11-2014 புதன் காலை 10 மணி. திருத்தம். திட்டத்தோடு ஏகினால். இங்கதனைக் கொண்டுவந்து எல்லோர்க்கும் ஈந்திட்டால்
தங்கமென மின்னிடும் நாடு.  ஈந்திட்டால் 
எங்கணுமே பொங்கிடுமின் பம்.)

எப்படி யோ சேர்த்தபணம் எங்கோஓர் நாட்டினிலே
குப்பையென வங்கிக்குள் கூடுவதோ - தப்பாமல் 
இங்கதனைக் கொண்டுவந்து எல்லோர்க்கும் ஈந்திட்டால் 
எங்கணுமே பொங்கிடுமின் பம்.

(காலை மணி 10-10)

ஆதி உலா

பாதி மதிநதி பாம்பணிந் தோன்பவனி
ஆதி உலாவெனும் அற்புதநூல் - மேதினியோர்
சீராய் மனமகிழ்ந்து சிந்தையுறச் செப்பிடவே
சேரமான் செய்தார் சிறந்து.

(14-11-2014 வெள்ளி.  மாலை 4 மணி)

புதன், 20 ஜனவரி, 2016

முனைவர்.இரா.வ.கமலக்கண்ணன்

நாலா யிரத்தையும் நற்பார தத்துரையும்
சீலமாய்ச் செய்திட்ட செம்மலே! - ஏலாது
பாவெழுத வென்றதனைப் பக்குவமாய்ச் சொன்னீரும்
நாவுரைக்கும் சொல்லேநற் பாட்டு

(23.10.2014. பகல் 1-42 மணி)

செல்வம்

தன்கையை நம்பித் தளரா துழைப்புடன் 
அன்பாய்த் தொழிலாளர் ஆதரவில் - சென்மமும்
கொல்லுமது தீண்டாமல் கோடா தறம்செய்தால்
செல்வ மது சேரும் செழித்து.

(13.10.2014. இரவு 7-50)

புரசைவாக்கம் வரதராசப் பெருமாள் -13

ஆனையைக் காத்தவா அன்றுபாஞ் சாலியின்
மானத்தைக் காத்தவா மாதவா - நானுனது
சேவடி போற்றுவன் செம்மையாய் என்பாதம்
பாவிடவே நீயருள் செய்.

(4.10.2014 இரவு 7-15  மணி. கோயில்) 

புலனடக்கம்

காமம் வெகுளி மயக்கமும் கட்டவிழ்ந்தால்
சேம ஒழுங்கு சிதைந்திடும்  - நாமெல்லாம்
ஐம்புலன் தன்னை அடக்கிடக் கற்றிட்டால்
செந்திறமாய் வாழ்வாகும் சீர்.

(30.9.2014 காலை 3 மணி)

கவிஞர் ஜோராவுக்கு

நின்றுவே ளாங்கண்ணி நீடுபுகழ் கொண்டவளே
என்றுனைக் காண்பதென ஏங்குகிறேன் - நன்றாயெம்
ஜோரா வுடன் வந்து தோத்தரிப்பேன் நீயவரின்
தீராத நோய்தன்னைப் போக்கு.

(25-9-2014 காலை 10-45. ஜோசப்ராஜ் 2.10.2014அன்று புற்றுநோயால் இறந்தார். 3.10.2014 அன்று வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றேன்)

திருக்குறள்

அறமும் பொருளும் அணிசெயும் காமம்
திறமாய் உரைத்திடும் தேனாய் - சிறப்பாய்
இருக்கின்ற நூலாம் எவர்க்கும் பொதுவாம்
திருக்குறளைத் தேசியநூ லாக்கு.

(25-9-2014. பகல் 12-25)

செவ்வாய், 19 ஜனவரி, 2016

மழைநீரைத் தாங்கும் மதகு

பங்கமிலா நூலறிவைப் பட்டறிவைத் தாம்தாங்கி
எங்கணுமே நன்றாய் இறைத்திடுவர் - நங்காய்!
அழகாகப் பேரறிவில் ஆழ்ந்தநற் சான்றோர்
மழைநீரைத் தாங்கும் மதகு.
(இலக்கியச் சோலை. ஜனவரி 2016. பக்கம் 23)