வியாழன், 20 ஜனவரி, 2011

பொங்கலைப் போற்று

நேரிசை ஆசிரியப்பா

எங்கள் உழவர் இடைவிடா துழைத்துத்
தங்கமாய் நெற்கதிர் தந்துளார்
தைத்திரு நாளில்
வைத்து மகிழ்வர் பொங்கலைப் போற்றவே!

("நற்றமிழ்"-உ0சு உ-சுறவம் 15.01.2011)

வெள்ளி, 14 ஜனவரி, 2011

கிளிநொச்சி

புலிவாலைத் தீண்டுவதால் போர்வெற்றி யாமோ
கிலிபிடித்தே வீழ்ந்திடுவீர் கீழே - மலிவாய்க்
களியுவகை கொள்ளாதீர் காலமது காட்டும்
கிளிநொச்சி சிங்களர்க்குக் கூற்று!

(6.10.2008 மாலை 6.10 இ)

தேர்ந்தாய்ந்து பார்

கருப்பைச் சிவப்பென்றும் காளை பசுவென்றும்
கருத்திலா மூடர் கதைப்பர் - திருத்தமுடன்
ஓர்ந்துகண் ணோடாது நலலவை தீயவை
தேர்ந்தாய்ந்து பார்த்துத் தெளி!

("பன்மலர்"-வெண்பாப் போட்டி-92-நவம்பர்,2008)

வன்முறையை வேரறுப்போம்

குண்டெறிதல் தீவைத்தல் கொல்லல் இறக்கமின்றி
கண்டபடி பேயாட்டம் ஆடிடுதல் - உண்டவீட்டில்
கன்னம்வைத் தோடல் கயவர்களின் தீச்செயலாம்
வன்முறையை வேரறுப்போம் வா!

(21.9.2008 இரவு 12.30 இ)

பாரதி

பாட்டுக் கொருபுலவன் பாரதியின் பாட்டெல்லாம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லனவாம் - கேட்பதுடன்
எத்துணைநாள் கற்றாலும் இன்பம் செவிநிறையும்
தித்திக்கும் செந்தமிழ்த் தேன்!

(29.9.2008 காலை 11.55 அ)

அணுசக்தி ஒப்பந்தம்

அணுசக்தி ஒப்பந்தம் சேதுகடல் திட்டம்
பிணக்கின்றிச் செய்தல் பெருமை - இணக்கமாய்
இந்தியர் ஒன்றாய் இணைந்திடில் என்றும்
எந்தத் தடையுமி ராது!

("பொதிகை மின்னல்" - நவம்பர் 2007)

வீட்டுக்கொரு வீரர்

உள்நாட்டில் வன்முறைகள் ஓநாய்போல் அன்னியர்கள்
கள்ளத் தனம் செய்யக் காத்துள்ளார் - துள்ளியெழு
வீட்டுக்கோர் ஆணென்றே வீர முரசரைந்து
நாட்டின் நலனையே நாடு!

("முல்லைச்சரம்" - ஜூலை 2010)

காக்கையின் ஏக்கம்

வெள்ளைப் புறாஅழகு வீடோமேல் மாடியாம்
உள்ளத்தை தந்தே உழலாதே - எள்ளளவும்
எட்டாது நம்மினமென்று ஓதிற்று காக்கைதன்
குட்டிக்குஞ்சு ஏங்குவதைக் கண்டு!

("பொதிகை மின்னல்" ஜூன் 2010)

தீயவரைத் தீக்குளிக்கச் செய்

கொலைவெறியர் ஈழத்தில் கொக்கரித்து நம்மை
இலையென்றே செய்ய அலைவார் - புலித்தமிழா
பேயனைய சிங்களர்க்குப் பேரிடியாய்க் கேடுகெட்ட
தீயவரைத் தீக்குளிக்கச் செய்!

("தமிழர் முழக்கம்" மீனம் (பங்குனி),மார்ச்சு-ஆப்ரல்:2009)

வியாழன், 13 ஜனவரி, 2011

தீயவரைத் துரத்து

தமிழர் இனமழியத் தாங்குமோ உள்ளம்
தமிழர்களே ஒன்றாய்த் திரள்வீர் - தமிழ்மொழியின்
ஆயுதப் போர்ப்புலியாய் ஆர்த்தெழுந்து மும்முனையும்
தீயவரை இன்றே துரத்து!

("நற்றமிழ்"-உ0சு0, மீனம் 14.3.2009)

நாடகம்

பாலுக்கும் காவலொரு பூனைக்கும் தோழனென
வாலதனைப் பாம்புக்கும் வாய்த்ததலை - சேலுக்கும்
ஆடகமாய் இந்நாட்டின் றானதுவே எந்தமிழா
நாடக மீதென்றே நவில்!

("நற்றமிழ்" -உ0சு0, கும்பம் 13-02-2009)

உன்னை அறிவாய்

அளக்க இயலாதோ ஆளமுடி யாதே
அளந்தால் அழித்திட லாமாம் - அளந்தவன்
தன்னை அறிவான் தரணியை ஆளலாம்
உன்னை முழுதும் உணர்!

("பொதிகை மின்னல்" மார்ச் 2009)

படைவீரர்

கண்ணயர்ந்தால் போதும் கழுத்தினில் கத்தியென்றே
எண்ணி விழித்திருப்பர் எம்வீரர் - திண்ணமுடன்
நாட்டுயிரைக் காத்திட நல்லுயிர் ஈந்தவர்தம்
வீட்டாரை யும்சேர்த்து வாழ்த்து!

("பொதிகை மின்னல்" ஜனவரி 2009)

பொங்கலோ பொங்கல்

ஆய்ந்தறிந்து செந்தமிழின் ஆற்றல்மிகு நூல்பலவும்
போய்விரும்பி நீகற்றுப் போற்றிடுவாய் - ஓய்வின்றி
எங்கும் தமிழ்ச்சுவையை இன்பமுறக் காட்டியிவண்
பொங்கலோ பொங்கலெனப் பொங்கு!

(29.12.2009. காலை 10.45)

பொங்கல்

காட்டைத் திருத்திக் கழனியாக்கி
மாட்டின் துணையுடன் மழையும் உதவிட
செந்நெல் விளைத்து நாடு செழிக்கும்
இந்நாள் உழவரைப் போற்றுதைப் பொங்கலே!

("கண்ணியம்" சனவரி-2011)

திங்கள், 10 ஜனவரி, 2011

எதைத்தான்...

நிலைமாறிப் போகின்றாய் நின்னுடைய பாங்கோ
தலைகீழாய்ப் போனதிங்கே தம்பீ - இலையில்
விதவிதமாய்த் தின்பண்டம் உன்விருப்போ வேறாம்
எதைத்தான் கொள்வாய் இயம்பு?

("தமிழரின் மனித நேயம்" - ஜனவரி, 2011)

தைப்பொங்கல்

வீடெல்லாம் தானியங்கள் வெவ்வேறு வண்ணங்கள்
ஆடுமாடு கன்றுபசு ஆட்டங்கள் - தேடிவரும்
சொந்தபந்தம் நட்புடனே சுற்றிவரும் பெண்டுபிள்ளை
செந்தமிழர் தைப்பொங்கல் சீர்!

("பொதிகை மின்னல்" - ஜனவரி 2011)

நாம் முயன்றால்

வெளிவிருத்தம்

கண்ணில் ஒளிபிறக்கும் காட்சி தெளிவாகும் - நாம் முயன்றால்
திண்ணம் உளமாகும் தேர்ந்த கனவெல்லாம் - நாம் முயன்றால்
எண்ணம் நிறைவேறும் ஏற்றம் தொடர்ந்துவரும் - நாம் முயன்றால்
மண்ணில் வளங்கொழிக்கும் மாற்றம் வரவாகும் - நாம் முயன்றால்

(30.8.2010-மாலை 4.55)

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

வேடதாரிகள்

குடித்தாட்டம் போட்டுக் குமரிகளைத் தேடிக்
கெடுமதியால் வீழ்ந்தே கிடப்பர் - மடமையினால்
தேவரெனப் போற்றித் தொழவேண்டாம் அக்கயவர்
காவியுடை வேடதாரி கள்!

"மீண்டும் கவிக்கொண்டல்" - ஆகஸ்டு - 2010)

அழகு முகம்

அழகிய முகமதி நினைவினில் வலம்வர
எழுதிய படந்தனில் விளைந்திடும் குறுநகை
எழுகதிர் முகமது தான்!

ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை.
"நற்றிணை" ஆடவை 15.06.2010.ஆகஸ்ட் 2010)

அன்பு வேண்டும்

மட்டிலாச் செல்வம் மனையில் இருந்தாலும்
எட்டுணையும் அன்பின்றேல் என்னாகும் - சுட்டே
அடுக்கிய செங்கற்கள் ஆமோநல் வீடாய்
இடிந்துவிழும் சாந்திணைப்பில் லாது!

(திருக்குறள் அதிகரம் 53 இல் பயின்றுவரும் கருவிளச்சீர்களில்
ஒன்றனை ஒன்பதாம் சீராகக் கொண்டு எழுதப்பெற்றது.
"பன்மலர்" ஆகஸ்ட் 2010)

முனைப்பு

ஆட்சி புரியத்தான் ஆசை அதற்குரிய
மாட்சிமைக் காயுழைத்தல் வேண்டுமே - காட்சிக்கோ
யானைபோல் தோன்றி எலிபிடிக்கத் தாவிடும்
பூனைபோல் நிற்பதென் புகல்.

(திருக்குறள் அதிகாரம் 52 இல் பயின்றுவரும் கருவிளங்காய்ச்
சீர்களில் ஒன்றனை நான்காம் சீராகக் கொண்டு எழுதப் பெற்றது
"பன்மலர்" ஜூலை 2010)

குமரி அம்மன்

குமரி முனையில் குளிர்ச்சியாய் நின்றே
நமது குறைகள் தீர்ப்பாள் - அமுதாய்
அகவை முதிர்ந்தோர்க்கும் ஆறுதல் நல்கும்
பகவதி அம்மனைப் பாடு!

(பொதிகை மின்னல் - ஆகஸ்ட் 2010)