ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

உத்தமனா நீ?

குள்ளனாகச் சென்றந்த மாவலியிட மிரந்து
             கேட்டனை மூவடியில்மண்
    குறையொன்று மிலாதவன் கொடுக்கவும் வஞ்சனாய்க்
             கொற்றவன் சிரமழுத்தினாய்

கள்ளனென மறைந்திருந்து வாலியின் மார்புதனைக்
            கணையால் துளைத்திட்டனை
     கர்ணனின் உயிரனைய தருமத்தை யாசித்துக்
            காலனுக் கிரையாக்கினை

உள்ளமெலாம் அடியவர்கள் உனையே நினந்துருகும்
            ஒப்பற்ற மாமாயனே
     உன்தகுதிக் கிவையெலாம் ஒக்குமோ கண்ணனே
             உத்தமன் நீயாவையோ?

எள்ளிநகை யாடிடும் மானிடா மெய்மையும்
            வாய்மையாம் நன்மைதரின்
      இவ்வுலகத்தில்  தருமத்தை நிலைநாட்ட வேறுவழி
             எனக்கொன்றும் தோன்றவிலையே!

                                                                - அரிமா இளங்கண்ணன்

(வெளியானது:'உரத்த சிந்தனை" 30-ஆவது ஆண்டு மலர்.
ஆண்டுவிழா நிகழ்வு:9-3-2014.சந்திரசேகர் திருமண மண்டபம்
மேற்கு மாம்பலம், சென்னை.33)
         


கல்விச் சாலை

இளமையிலே பயின்றிட்ட என்னைப் போன்றோர்
         எழுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிக் கூடம்
உளம்மகிழ மேற்படிப்பைத் தருங்கல் லூரி
        உற்சாக  விளையாட்டோ டெவ்வி டத்தும்
களவற்ற மனக்கொண்ட பேரா சான்கள்
        கட்டுப்பாட் டொழுக்கமொடு கல்வி சொல்லி
அளவற்ற செல்வத்தை அள்ளித் தந்தார்
       அதனாலே செல்வங்கள் பலவும் பெற்றோம்!

கல்விக்கூ  டம்சிலரின்  காமக் கூடம்
      காசுபணம் பறிப்போரின் கொள்ளைக் கூடம்
பல்விதமாய் அரங்கேறும் வன்முறைகள்
     பாலியலில் பலவழியில் துன்புறுத்தல்
சொல்லிக் கொடுக்கின்ற குருவும் பாடம்
       சொல்லவந்த மாணாக்கர் பேதம் இன்றி
எல்லாத்தீச் செயல்களையும் புரிந்து வாழும்
        இடமாக மாறிற்றோ இந்நாள் ஐயோ!

கல்வியதன் ஒற்றிழந்தால் கலவி யாகும்
        களியாட்டம் ஆடஅல்ல கல்விக் கூடம்
நெல்விதைத்தால் நெல்கிடைக்கும் வயலில் ஆங்கே
       நிறைநிறையாய்ப் புற்களுமே முளைப்ப துண்டு
கல்லியதை முளையிலேயே பிடுங்கி விட்டால்
      களமெல்லாம் தானியங்கள் குவிந்து நிற்கும்
நல்லவழி காட்டுதற்கே கல்விச் சாலை
      நன்றாக இதனையவர் உணர்தல் வேண்டும்!

                                                                  - அரிமா இளங்கண்ணன்

(வெளியானது: "கவிதை உறவு". டிசம்பர் 2013. பக்கம்.16)

ஏன் படைத்தேன் ?

எதுவேண்டும் என்றிந்த மானு டத்தை
     இறைவாநீ படைத்திட்டாய் என்றே என்னை
மெதுவாக வினவுகின்ற மனிதா  கேளாய்
    மேதினியில் உத்தமனாய் மனிதன் தோன்றி
அதிசயிக்கும் அறிவுமிக தயையும் கூடி
    அறத்தாலே சேர்த்தபொருள் அனைத்தும் ஈந்தே
எதுவரினும் மாறாநல் மனத்தா னாகி
     எனைபோன்ற இறையெனநான் உயர்த்து தற்கே!

                                                          - அரிமா இளங்கண்ணன்

(16-1-14 இரவு 7.50 மணி, வீடு. "கவிதை உறவு" இதழில்
 ஆசிரியர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியதற்கு
மறுமொழியாக எழுந்த கவிதை.)



சனி, 23 ஆகஸ்ட், 2014

தாலாட்டு

ஊரார்தாம் மலடியென்றே தூற்றா வண்ணம்
     உற்றவர்கள் மனமகிழப் பெற்ற சேயைச்
சீராட்டிச் சிணுங்கிடுமுன் ஓடிச் சென்றே
    சிறுபசியும் தானுணர்ந்து மார்ப ணைத்துப்
பாராட்டிப் பலர்வாழ்த்த நல்ல நாளில்
    பாங்குடனே தொட்டிலிட்டுப் பேரும் வைத்தே
ஆராரோ ஆரிரரோ என்றே அன்னை
    அருமையுடன் தாலாட்டித் தூங்கச் செய்வாள்!

கருவிலேயே தாய்குரலைக் கேட்ட பிள்ளை
    காதினிக்கத் தாலாட்டுப் பாடும் போதில்
இருவிழிகள் தாமயரத் தாம ரைப்பூ
    இரவினிலே கூம்புதல்போல் உறக்கம் கொள்ளும்
அருகினிலே தாயிருந்து பாடும் பாட்டால்
    அழகுடனே முறுவலிக்கும் கனவு கண்டே
ஒருகாலை மேல்தூக்கி மடக்கி வைத்தே
     ஒயிலாகத் தூங்குவதோர் அழகின் எல்லை!

தான்பட்ட இன்னல்களைக் கதைபோல் சேர்த்துத்
     தாலாட்டுப் பாடிடுவாள் அத்தை மாமன்
தேன்சொட்டும் மலர்ச்செண்டால் அடித்தார் என்றே
     தித்திக்க உறவுசொல்லிப் பாட்டி சைப்பாள்
மீனாட்சி சிவன்முருகன் இராமன் தெய்வ
    மேன்மைகளைத் தாலாட்டில் விளக்கிச் சொல்வாள்
ஈன்றவளின் இன்னிசையே தாலாட் டாகும்
     இல்லத்தில் தாய்க்குலமே ஒலிக்கச் செய்வீர்!
                                             
                                                    - அரிமா இளங்கண்ணன்

(வெளியானது: "தமிழர் உலகம்" வேலூர். நவம்பர் 2013.விஜய ஆண்டு,
ஐப்பசி மாதம். பக்கம்,18-ஒஎ.)


 

காமராசர்

உலகத்தில் ஒப்பற்ற தலைவரோர் ஆயிரம்
           ஆண்டினில் அவதரிப்பார்
   உண்மையும் எளிமையும் மனிதநல் நேயமும்
           உற்றகுண மாய்த்தோன்றுவார்

சிலகாலம் ஆண்டாலும்  நாட்டுமுன் னேற்றத்தை
          சிரசிலே மேற்கொள்ளுவார்
   செய்கின்ற தியாகமோ கணக்கிலடங் காதவர்
          சிறந்தநற் கருமவீரர்

நிலையான புகழுடைய விருதுநக ரில்பிறந்த
         சிவகாமி யம்மைமகனே
   நிர்க்கதியா யுழன்றமிக தாழ்த்தப்பட் டோர்களின்
         ஏழைப்பங் காளரானார்

அலையாத மனதுடன் ஆசைகள் இல்லாமல்
         அருந்தமிழ் நாட்டையாண்டார்
   அதுபெரிய பொற்காலம் என்றெவரும் போற்றிடும்
         அவரேநம் காமராசர்!

                                                   - அரிமா இளங்கண்ணன்

(14-7-2013 ஞாயிறு இரவு 7.45. வீடு)
(15-7-13 காமராசர் பிறந்த நாள் விழா
முகப்பேறு அமுதா மேல்நிலைப் பள்ளியில் சிறப்புச்  சொற்பொழிவாற்றும்போது வாசித்த கவிதை.)

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வெண்பாப் போட்டி வாழ்த்து

மின்னல் தமிழ்ப்பணிக்கும் மேன்மையுறு வெண்பாவில்
கன்னல் சுவைதந்த பாவலர்க்கும் - இன்னும்
எழுதிடு வோர்க்கும் இளங்கண்ணன் நல்கும்
பழுதிலா வாழ்த்துப் பரிசு!

                                                  - அரிமா இளங்கண்ணன்

("மின்னல் தமிழ்ப்பணி" நடத்திய வெண்பாப் போட்டியில் நடுவராக
இருந்து எழுதியது.வெளியானது.நவம்பர் 2013 - கார்த்திகை 2044)

எப்போதும் வேண்டும் எனக்கு

ஆய்ந்தறிந்து நூல்கற்க அன்புடன் சேவைசெய
நோயற்ற வாழ்வும் பொருள்வளமும் - தேய்வின்றி
முப்போதும் நல்லுணவும் மூப்பில்லா உள்ளமும்
எப்போதும் வேண்டும் எனக்கு.

                     - அரிமா இளங்கண்ணன்

(7-5-2014 மாலை 7.23. லாஸ் ஏஞ்சல்ஸ்)

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

முதலும் முடிவும் (செருப்பு - விளக்குமாறு)

செருப்பில்லாக் கால்களுடன் சென்றிட்டாள் வேலை
உருப்படியாய்க் கிட்டவில்லை ஒன்றும் - நெருப்பாய்
எரியும் வயிற்றுக்காய் எப்பணியும் செய்ய
வரிந்தெடுத் தாள்விளக்கு மாறு.

                                           - அரிமா இளங்கண்ணன்

(19-8-2014 காலை 11.29. லாஸ் ஏஞ்சல்ஸ்)

என் இனிய தேசம்!

என்னினிய தேசத்தில் எல்லோரும் ஒன்றிணைந்தே
இன்பமுடன் வாழ இடமளிப்பாய் - புன்மைமிகு
எண்ணங்கள் மாய்ந்தொழிந்தே எல்லாம் நலம்பெறவே
கண்ணசைப் பாய்காளித் தாய்.

                                                      - அரிமா இளங்கண்ணன்
(14-8-2014 பிற்பகல் 2.10. லாஸ் ஏஞ்சல்ஸ்)

பராசக்தி

சிங்கம்தன் பின்புறத்தே சீற்றமுறச் சூலமுடன்
செங்கையில் வாள்கதையும் செந்தீயும் - அங்கமெலாம்
பேரழகும் நற்கருணை பொங்குமிவள் எம்குலத்தின்
சீரருளும் தெய்வமாம் செப்பு.
                                                        - அரிமா இளங்கண்ணன்
(சீர்பரா சக்தியெனச் செப்பு. - 15-8-2014 வெள்ளி பிற்பகல் 12.10
லாஸ் ஏஞ்சல்ஸ்)

கல்லுக்குள் ஈரம்

கல்லடி பட்ட நாய்க்குட்டி
  கண்டான் கசாப்புக் கடைக்காரன்
செல்லமாய் எடுத்தே அணைத்திட்டான்
  சிவப்பாய் ரத்தம் கைகளிலே
மெல்லக் கண்ட நாய்க்குட்டி
  மெதுவாய்க் கைகளை நக்கித்தன்
சொல்ல இயலா நன்றியினைச்
  சுகமாய் உணர்த்தி மகிழ்ந்ததுவாம்!
                                                                     - அரிமா இளங்கண்ணன்
( கவிஞர் மீ.விசுவநாதன். சந்தவசந்ததில் எழுதிய வசன கவிதையின்
 மரபுக் கவிதை.13-8-2014 நண்பகல் 12 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)

ஆடிப் பூரம்

ஆடிப்பூ ரத்தில் அவதரித் தின்னிசை
பாடினாள் நற்றமிழ்ப் பாவையை - சூடினாள்
பூமாலை மாயவன் பொன்மணித் தோள்களில்
நாமெலாம் போற்றவே நன்று.

                               - அரிமா இளங்கண்ணன்

(29-7-2014 திங்கள் பிற்பகல் 3.17 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்-ஆடிப்பூரம் 30.7.14)

ஆடி அமவாசை

ஆடிமா தத்தில் அமாவாசை நன்னாளில்
கூடி இருந்துநாம் கும்பிட்டு - நாடியே
முன்னோர் தமைநினந்து மூழ்கிநீ ராடினால்
எந்நாளும் நன்றாம்  நமக்கு.

                                              - அரிமா இளங்கண்ணன்

(26-7-2014 சனி  காலை 11.25 மணி.-ஆடி அமாவாசை. லாஸ் ஏஞ்சல்ஸ்)

ஆடி வெள்ளி

ஆடிவெள் ளிக்கிழமை அம்மனது கோயிலைத்
தேடியே சென்று தரிசித்தால் - ஓடிவிடும்
தீராத நோய்நொடிகள் தேக பலம்கூடும்
சீராக வந்திடும்செல் வம்.

                                              - அரிமா இளங்கண்ணன்

(எழுதியது:18-7-2014 ஆடி முதல் வெள்ளி. இரவு 10.27 மணி)

மாரியம்மன் - 6

எல்லோரும் நின்றொதுக்க ஏதும் புரியாமல்
சொல்லிழந்து நிற்கையிலே சூலமுடன் - எல்லையிலா
ஆனந்தம் தந்தருளும் அற்புதமே எக்காலும்
யானடிமை என்மாரித் தாய்.

                                 - அரிமா இளங்கண்ணன்
(எழுதியது: 10-6-2014 செவ்வாய், அதிகாலை 3.30 மணி)

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சொல்

தொழத்தக்க எம்தமிழர் எழுத்தும் தெய்வம்
       தூரிகையும் வணங்குகின்ற தெய்வம் என்பார்
எழுத்துக்கும் சொல்லுக்கும் ஏற்ற வாறே
       எத்துணையோ பொருள்களவை விந்தை யாகும்
அழுத்தமுடன் உச்சரித்தால் காணும் அர்த்தம்
       அதைவிடுத்தால் ஒற்றெழுத்தால் மாறிப் போகும்
பழச்சுவையாய்த் தேன்போன்ற சொற்கள் தம்மில்
       பட்டென்று கொட்டுகின்ற கொடுக்கும் உண்டு!

கண்ணகியின் சொல்லம்பு தீயாய் மாறிக்
      கவின்மதுரை நகரத்தை அழித்த தன்று
திண்ணமிகு வெற்றிகண்ட நந்தி வர்மன்
       தீச்சொற்கள் அறம்பாடத் தீயுள் மாய்ந்தான்
பண்ணிசையில் எழுகின்ற சொற்கள் வானில்
        பறந்துபெரும் மழையினையே தருதல் கூடும்
எண்ணத்தில் விளைகின்ற சொற்கள் எல்லாம்
        இதயத்தை வருடுவதாய் இருத்தல் வேண்டும்!

பேசாத சொற்களுக்குத் தலைவன் நீயே
        பேசிவிட்டால் அதற்கடிமை நீயே ஆவாய்
கூசாமல் பிறர்மீது குறைசொல் லாதே
       குலைகுலையாய்க் கனியிருக்கக் காயுண் ணாதே
நேசமிகு சொற்களுடன் நெருக்கம் கொள்வாய்
        நிகழ்ச்சிகளில் இலக்கியமாய் முழக்கம் செய்வாய்
பாசமுடன் தமிழ்மொழியின் உயர்வைப் பேசிப்
         பார்முழுதும் தமிழோசை பரவச் செய்வாய்!

                                                 - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "புதுகைத் தென்றல்" - ஜூன் 2013. பக்கம்.38 )

தமிழ்ப் பெயர்

அருகிலுள்ள நகராட்சிப் பள்ளி சென்றேன்
      ஆரம்பப் பள்ளியது மாண வர்கள்
வரிசையாக அமர்ந்திருந்து தங்கள் பேரை
      வகுப்பாசி ரியர்சொல்ல எழுந்து நின்றார்
சரியான தமிழ்ப்பெயர்கள் ஒன்றும் காணோம்
      சத்தீஷ் ரோகித் ரமேஷ் ஆர்யா சூர்யா
முருகேஷ் லிங்கேஷ் பிரணவ் ஷக்தி யோகா
      முழுவதும்வாய் நுழையாமல் இன்னும் உண்டு.

பெயர்வைத்தே முன்பெல்லாம் ஒருவர் வாழ்ந்த
       பிறந்திட்ட மாவட்டம் அறிய லாகும்
உயர்விகுதி 'அன்'என்றும் 'அள்'என் றும்தான்
      ஆண்பெண்கள் பெயரெல்லாம் முடிவ துண்டு
வியர்த்திடவே மூட்டைகளைச் சுமப்போர் எங்கும்
      விமானத்தில் பறப்போரும் தம்பிள் ளைக்குப்
பெயர்தமிழில் வைத்திடஏன் தயங்கு கின்றார்
       பிற்காலம் தமிழ்ப்பெயர்கள் மறந்தே போகும்!

                                         - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "புதுவை பாரதி" - புதுச்சேரி-ஜனவரி 2014-பக்கம்.11 )

மகிழ்வென்று பொங்கும் மலர்ந்து?

ஊழல் மதபேதம் ஓங்கிடும் பெண்கொடுமை
தாழும் நமதுநிலை தான்மாறி - தோழா
அகிலத்தில் எங்கும் அமைதி நிலவி
மகிழ்வென்று பொங்கும் மலர்ந்து?

                            - அரிமா இளங்கண்ணன்

( "உரத்த சிந்தனை"-வெண்பா விருந்து-07-ஜனவரி 2014. பக்கம்.54 )

ஓவியக் கவிதை

கற்றைக் கூந்தலும் நெற்றிப் பொட்டும்
கண்ணில் சிரிப்பும் இதழில் மலர்ச்சியும்
வெண்பல் முத்தும் வியப்புறு தோற்றமும்
சரச நங்கையோ சதிர்புரி மங்கையோ
'அரஸூ'வின் கைத்திறம் அழகொளிர் கின்றதே!

                                                - அரிமா இளங்கண்ணன்

( "உரத்த சிந்தனை" ஓவியக் கவிதைப் போட்டி. ஜனவரி 2014. பக்கம்.25 )

தானம்

கையிரண்டு பெற்றதெலாம் உழைப்ப தற்கே
       கண்ணிரண்டு பெற்றதருள் காட்டு தற்கே
பைநிறையச் சேர்த்தபணம் ஏழை யர்தம்
      பசிப்பிணியைப் போக்குதற்கே உதவ வேண்டும்
உய்வதற்கு நீயளிக்கும் தானம் எல்லாம்
     ஒப்பற்ற கடவுளுக்கே முதலில் சேரும்
ஐயிரண்டு திங்களிலே உன்னைப் பெற்றாள்
      ஆனந்தம் கொள்ளும்நற் செயலே தர்மம்!

                                                 - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "புதிய உறவு"-புதுச்சேரி-2014 மார்ச். பக்கம்.19 )

யார் பொறுப்பார்?

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன்றோர் முன்னர்
        அழகொழுக நடக்கின்ற திரும ணத்தால்
தூணொத்த மகன்பிறந்து பார தத்தைத்
        தூக்கிப்பி டிக்கின்ற பெருமை கொள்வான்
காணக்கண் கூசிடவே ஆணும் ஆணும்
       கட்டிளமைப் பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து
நாணத்தை விட்டுவிட்டுக் கட்டில் மீது
      நடத்துகின்ற கேவலத்தை யார்பொ றுப்பார்?

                                            - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "கண்ணியம்" ஏப்பிரல்-2014. பக்கம்.68 )

என் நெஞ்சை ஈர்க்கும் எழுத்து

குறளும் சிலம்பும் குருபரர் ஒளவை
புறமகம் பாரதி கம்பர் - திறல்மிகு
கன்னித் தமிழிலென் பேரன் எழுதுவதும்
என்நெஞ்சை  ஈர்க்கும் எழுத்து!

                              - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது; "முல்லைச்சரம்" மார்ச் 2014. பக்கம் 60 ) 

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

டாக்டர்.பசுபதி (கனடா)

பசுபதி யார்குமரன் ஆற்றுப் படையைப்
பசுபதி யாருரைக்கக் கேட்டேன் - இசைவுடன்
நல்லபல செய்தி நமக்களித்தார் காக்கவே
செல்வ மலைவாழும் சேய்!
                                                                - அரிமா இளங்கண்ணன்

(7-8-204  வியாழன்  நண்பகல் 12.36 மணி. லாஸ் ஏஞ்சலெஸ்)

மாரியம்மன் - 5

என்னை உனக்களித்தேன் என்னுயிரும் ஈந்திட்டேன்
முன்னைப் பெருவினைகள் போக்குவாய் - அன்னையே
உன்னைப்போல் தெய்வமிங் கொன்றுண்டோ மாரியே
என்னைநீ ஏற்றுக்கொள் வாய்!
                                                                      -அரிமா இளங்கண்ணன்

(30-4-2014 காலை 7.15மணி, தாணாத் தெருகோயில் முன்)

மாரியம்மன் - 4

நிர்க்கதியாய் நின்றஎனை நீயுந்தன் பிள்ளையெனச்
சொற்கவிதை பாடவைத்த சுந்தரியே - அற்புதமே
எந்நாளும் உன்பதமே ஏத்திப் பணிசெய்ய
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
                                                                - அரிமா இளங்கண்ணன்

(6-4-2014 பிற்பகல் 1.20 மணி)

மாரியம்மன் - 3

பசித்திடும் பிள்ளைக்குப் பாலூட்டல் போலப்
புசித்திடச் சோறிடும்பொன் மாரி - நிசியிலும்
என்னுட னேயிருந் தென்னின்னல் போக்குவாள்
அன்னையாம் என்மாரித் தாய்!
                                                                           - அரிமா இளங்கண்ணன்

(6-4-2014. பிற்பகல் 1.10 மணி)

மாரியம்மன் - 2

நெடுந்தூரம் ஓடியே நின்னடியார்க் கோயா(து)
இடர்தரும் கேடரைச் சாய்ப்பாய் - சடுதியில்
உன்கால் விரல்களுக் குற்ற சொடுக்கெடுப்பேன்
என்மாரித் தாயேநீ வா!
                                                        - அரிமா இளங்கண்ணன்

(19-9-2012 புதன். இரவு 11.50 மணி-விநாயக சதுர்த்தி)

மாரியம்மன் - 1

எட்டுக் கரத்தழகி ஈசான்ய திக்கழகி
பட்டுத் துகிலழகி பாம்பழகி - வெட்டும்
பகையழகி தீசூழ் புனத்தழகி சற்றே
 நகையழகி என்மாரித் தாய்!
                                                              - அரிமா இளங்கண்ணன்

(28-7-2012 சனி. இரவு 9.45 மணி. வீடு)

உமாபதி

உமையும் சிவனும் உலகோர்க் கருள
இமையும் மறந்திடா ராம்.
                                                                  - அரிமா இளங்கண்ணன்
(19-6-2014 காலை 11.14 மணி. லாஸ் ஏஞ்சலெஸ்)

முருகன்

வள்ளிதெய் வானை வலமிடம் நின்றிடத்
துள்ளிவரும் வேலும் துணைநிற்க - கொள்ளை
அழகொழுகும் தோற்றம் அணிமயில் சேயோன்
தொழுவார்க் கருள்புரி வான்!
                                                               - அரிமா இளங்கண்ணன்
(19-6-2014 காலை 10.15 மணி. லாஸ்  ஏஞ்சலெஸ்)

நினது செயல்

நிற்றல் நடத்தல் நினது செயலெனச்
சற்றும் நினைத்திட வேண்டாநீ - கற்றைக்
குழலான் அசைத்திடும் கைப்பாவை யாய்நீ
எழுதல் விழுதல் இயல்பு.
                                                         - அரிமா இளங்கண்ணன்

(2-6-2014 லாஸ் ஏஞ்சலெஸ்)

டாக்டர்.இரா.வ.கமலக்கண்ணன்

பாரதத்துச் சொற்பொழிவைப் பாவலர்யாம் கேட்காமல்
சீரார் அமெரிக்கா செல்லலுற்றொம் - மேராம்
கமலக்கண் ணன்பேச்சு கற்கண்டு போலாம்
எமக்கொரு நாள்சொல்லு வார்.

                                                    - அரிமா இளங்கண்ணன்

( 29-4-2014 செவ்வாய்-காலை 3.45 மணி. வீடு)
(சென்னை வன்னிய தேனாம்பேட்டையில் 21 நாட்கள் பாரதம் பற்றிய சொற்பொழிவு)

என்ன சிந்தனை? - (ஒளிப்படக் கவிதை)

பாடம் நன்றாய்ப் படிக்கவோ
        பள்ளியில் முதலாய் நிற்கவோ
ஆடல் பாடல் சிறக்கவோ
        அரிய சொற்பொழி வாற்றவோ
ஓடிப் பரிசை வெல்லவோ
        உயரே வானில் பறக்கவோ
நாடே உன்னைப் போற்றவோ
        நயந்த சிந்தனை எதுவாமோ?

                                                       -அரிமா இளங்கணன்

(13-4-2014-மாலை 5.50 மணி)

என்செய்வோம் உழுதுண்ண?

காடெல்லாம் கட்டிடங்கள் காணாத நீர்ப்பஞ்சம்
போடும் விதைமுளையா மின்வெட்டு - மாடாக
இன்னும் உழுதுண்ண எங்கட்கே ஏதுவழி
என்செய்வோம் சொல்வீர் இனி?

(11-4-2014 இரவு 7.15 மணி. வீடு)
(வெளியானது "உரத்தசிந்தனை" மே 2014)

இரட்டை வெண்பா - (காதற் சிறப்புரைத்தல்)

திருக்குறளில் காதற் சிறப்புரைத்தல் அதிகாரப் பொருளும் , ஏதேனும் ஒரு சீரை இறுதிச் சீராகவும் அகமும், நட்பு பற்றிப் புறமும் அமைந்த இரட்டை வெண்பா.
                                      அகம்
பாலோடு தேன்கலந்த பாங்கான செஞ்சொல்லும்
சேல்விழியும் கொண்ட சிறுநகையாள் - கோல
விளக்கென என்மனக் கோவில்தான் கொள்ளல்
வளைக்கரத் தாள்தன் குணம்.
                                      புறம்
ஒன்றாகத் தின்றுவிட்டே ஊர்சுற்றி நற்பண்பைக்
குன்றிடவே செய்வர் கெடுமதியர் - என்றும்
நிறைகளைப் போற்றியும் நேரல்ல மாற்றக்
குறைசொலல் நண்பர் குணம்.

(9-4-2014 இரவு 9.50 மணி)
(வெளியானது "பன்மலர்"  மே 2014)

பாரதிதாசன்

செறிவான சொற்களினால் சிந்தனையைத் தூண்டி
அறிவை வளர்க்கும்நல் ஆசான் - சிறப்பாய்த்
தமிழ்மொழியின் மேன்மைசொலித் தன்னுரிமை வேட்ட
அமிழ்தனையார் பாவேந்த ராம்.

(23-3-2014. ஞாயிறு. இரவு 7.35 மணி. வீடு)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" ஏப்ரல் 2014)

புதன், 6 ஆகஸ்ட், 2014

இல.கணேசனாருக்கு

தேர்தலில் வெற்றியும் தேடாப் பதவியும்
சீர்மிகவே வந்தும்மைச் சேர்ந்த்திடும் - நேர்மையாய்
என்றும் உதவும் இலகணேச னாருக்கு
நன்றிசொலும் நம்பா ரதம்.

(22-3-2014 பிற்பகல் 2.35 மணி- தென் சென்னைப் பாராளுமன்றத் தொகுதி பா.ஜ.க. அலுவலகம் திறப்பு)

ஒளிப்படக் கவிதை - பாப்பா

பாப்பா பாப்பா கதை கேளு
பாட்டி சொல்லும் கதை கேளு
அப்பா அம்மா சொல் கேளு
அநாதை இல்லம் அனுப்பாதே
தோப்பாய் உறவுடன் இருந்தால்தான்
தொல்லைகள் எல்லாம் தாங்கிடலாம்
"போ பாட்டி" எனச் சிரிக்காதே
பொக்கை வாயது உனக்கும் தான்!

(11-3-2014-இரவு 8.30 மணி. வீடு)

இரட்டை வெண்பா (குறள்.அதிகாரம் 112)

திருக்குறள் அதிகாரம் 112-நலம் புனைந்துரைத்தல்-இல் இடம்பெறும் முதற்சீர்-அகமும். உழவின் பெருமை குறித்துப் புறமும்-இரண்டு வெண்பாக்களும் ஒரே வகையான தளை பெற்றிருத்தல் )

                                 அகம்
அன்னத்தினதூவி அடிக்கூறாம் மாங்கனி
கன்னத்தைக் கண்டே கவன்றிடும் - மின்னல்
கொடியிடைமேல் பாரம் குலைத்தெங்கு நாணும்
நடமயிலாள் மண்ணில் மதி.

                               புறம்
அன்னத்தின் மாண்பை அறிவாய்நீ ஏருடன்
முன்னம்தாம் சென்றே முனைபவர் - செந்நெல்
பெருவிளைச்சல் கண்டு பெருவானைப் போற்றும்
எருதுழவர் தம்மை மதி.

(10-3-2014 காலை 9.25 மணி. வீடு)
(வெளியானது "பன்மலர்" ஏப்ரல் 2014 பக்கம்15)

"நம் உரத்த்சிந்தனை" 30-ஆம் ஆண்டுவிழா

ஆண்டுவிழா முப்பதில் ஆனந்தக் கொண்டாட்டம்
ஈண்டிதுபோல் செய்ய எவர்க்கியலும் - தோண்டுநீர்
ஊற்றனைய நம் உரத்த சிந்தனை ஏடுவர
லாற்றில் நெடிதுயரும் தேர்.

(விழா 9-3-2014 மாலை.மேற்குமாம்பலம் சந்திரசேகரன் திருமண மண்டபம்)
(எழுதியது 11-3-2014 காலை 9.55 மணி. வீடு)

கற்பகவல்லியே காப்பாற்று

பால கிருஷ்ணனை பங்கயக் கண்ணனை
சீலநர சிம்மனை சீர்மயிலை - கோலவிழி
சொற்சுவை முத்துராம மூர்த்தியை மற்றோரைக்
கற்பக வல்லிநீ கா!

(2-3-2014 மாலை 6 மணி-மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சுரர் திருக்கோயில்-நான்,வானொலி கமலக்கண்ணன்,சரித்திர நாவலாசிரியர் உதயணன்(நரசிம்மன்), காஞ்சிபுரம் கவிஞர் முத்து.ராமமூர்த்தி)

ஆணுக்குப் பெண் நிகர்

வயலில் மருத்துவத்தில் வான்படையில் வீட்டுச்
செயலில்நற் கல்வி சிறந்தார் - மயிலனையார்
காணுகின்ற தோற்றம் கணித்திடற் காகாதே
ஆணுக்குப் பெண்நிகரே ஆம்.

(22-2-2014 வீடு)
(வெளியானது 'மீண்டும் கவிக்கொண்டல்" மார்ச்சு 2014 பக்கம் 33. வரிசை.72)

வரகவி மார்க்கசகாய தேவர் இயற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

பிள்ளைத் தமிழில் பெரும்புலவர் ஞானத்தில்
எள்மூக் களவு மெனக்கில்லை - தெள்ளிய
என்னுரை நன்கமைய ஏத்துவன் பொன்விரிஞ்சை
யின்முருகன் பூந்தா ளிணை.

( உரையின் முன்னுரையில்- 21-2-2014 வீடு)

திரு.இல.கணேசன் 69 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

எமதினிய நற்பேறி தெவர்க்கிவண் வாய்க்குமென
               எல்லோரும் மகிழுகின்றோம்
       எங்களன் புத்தலைவ ராகவே விளங்கிடும்
                இலகணேச னார்பிறந்தநாள்

தமதுநலன் எதனையுங் கருதாம லினியபொற்
                 றாமரையை வழிநடத்தியே
       தன்னுடன் பிறப்பாக எம்மையும் மதித்திடும்
                தங்கமனத் தார்வாழ்கவே

இமயமுதல் குமரிவரை ஒரேநா டெனமுழங்கி
             ஏற்றவொரு கொள்கைதனில்
      இம்மியள வும்பிசகி டாதயிக் கர்மயோகி
             எண்ணியவா றினிதுவாழ்க

கமலா லயந்தன்னி லெழுந்தருளு மீசனார்
             கருணாம்பி கையுமையுடன்
      கணபதியும் வேலவனு மெங்களில கணேசனார்க்
             கருள்புரிய வாழ்க வாழ்க!

(16-2-2014 அன்று 69-ஆவது பிறந்தநாள்-நேரில் வாசித்துக் கொடுத்தது)

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

திரு.இல.கணேசன் -69

அறுபதோ டொன்ப தகவையா இல்லை
இருபதோ டொன்ப திவர்க்காம் - திருவார்
இலகணெச னாரிளமை யாய்விளங்கற் குண்டாம்
வலம்புரிப் பிள்ளையார் வாழ்த்து.

(16-2-2014 இல.கணேசன் பிறந்த நாள்)

இரட்டை வெண்பா (குறள். அதிகாரம் 111)

(திருக்குறள் அதிகாரம் 111-ல் (புணர்ச்சி மகிழ்தல்) உள்ள குறட்பாக்களில் உள்ள ஒரு சீரை முதற் சீராகக் கொண்டு அகமும், கொடையும் மறமும் கூறும் புறமும் வேண்பாவில் பாடவேண்டும்)

                                  அகம்

உலகு வியந்திடும் ஒப்பிலாத் தோற்றம்
குலவும் சிறுகிளிக் கொஞ்சல் - நிலவும்
பொறையினாள் மென்தோள் புணர்ச்சி மகிழ்தல்
இறையுல குக்கே இணை.

                                   புறம்

உலகு புரந்திடும் உத்தமன் வீரம்
இலகு பெரும்படை ஏந்தல் - நிலவின்
குளிர்ச்சியாய் ஆளும் கொடையிற் சிறந்தோன்
உளத்தினில் மக்கட் கிறை

(14-2-2014 னண்பகல் 12.30 மணி)
(வெளியானது "பன்மலர்" மார்ச்சு 2014)

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

விநாயகர்

நாகுபதி யின்துணைவி நாரா யணன்தங்கை
மேகமலை யான்மகளின் மேல்மைந்த - ஆகுபதி
உன்புகழைப் பாடாம லோடியதென் காலமினி
என்நெஞ்சில் என்றும் இரும்.

(21-1-2014 இரவு 8.45 மணி)

சிவன் - விநாயகர்

வேகபுரம் தான்சிரித்து விண்ணோர் மகிழ்வடைய
நாகுபதி யாய்நின்ற நாயகமே - ஆகுபதி
உன்மூத்த் பிள்ளையான் உற்றிடும் துன்பங்கள்
ஒன்றுமிலா தாக்கிடச் சொல்.

வேகபுரம் =திரிபுரம் எரிந்து வேக; நாகுபதி-பசுபதி; சிவன்; ஆகுபதி=பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட பிள்ளையார்

(21-1-2014 இரவு 7.40 மணி)

சூடு சொரணையுண்டோ சொல்

தாய்தார மானத்தத் தந்தேச மண்பதனைப்
பேயெனவே காசுவிலை பேசுபவன் - வாயெல்லாம்
கேடுரைப்போன் பெண்பித்தன்  கீழ்க்குணத்தோன் என்றிவர்க்குச்
சூடு சொரணையுண்டோ சொல்!

(17-1-2014 மாலை 6.55 மணி)
(வெளியானது "நம் உரத்தசிந்தனை" வெண்பா விருந்து - 5)

ஒளிப்படக் கவிதை - பேருந்து

மஞ்சு விரட்டெனவே மாநகரப் பேருந்தை
அஞ்சாமல் ஓடி அதில்தொங்கி - நெஞ்சுயர்த்தி
மேலேறி ஆடுவதோ மேதகு மாணவர்கள்
கல்லூரி சென்றிடுங் கால்!

(16-1-2014 காலை 11.45 மணி)

மகன்

அன்னையின் சொல்லை அனுசரித்தே பட்டறிவால்
தன்தந்தை காட்டும் வழிநடந்து - மின்னிடையார்
பொன்வலையில் வீழாது புத்தகங்கள் கற்றே
இன்முகமாய் நிற்போன் மகன்.

("மீண்டும் கவிக்கொண்டல்" திசம்பர் 2012. பக்கம் 30.வரிசை 61)

உழைப்பாளர்

பொல்லா வயிறு புசித்துப் பசியடங்க
எல்லாக் கடும்பணியும் ஏற்றிடுவார் - நல்லோர்
பிழைப்பைக் கெடுக்காமல் பேருதவி செய்தே
உழைப்பாளர் வாழ்வை உயர்த்து.

("மீண்டும் கவிக்கொண்டல்" மே 2013 பக்கம் 30.வரிசை எண்.61)

அண்ணா

எத்தலைப்பைத் தந்தாலும் இன்றமிழில் ஆங்கிலத்தில்
முத்தனைய சொற்பொழிவை முன்வைப்பார் - நித்தம்
கவலைபல வந்தும் கருத்தழியா நெஞ்சர்
அவரேதாம் அண்ணா அறி.

("மீண்டும் கவிக்கொண்டல்" பிப்ரவரி 2014. பக்கம் 31. வரிசை எண்.49)

பொங்கல்

நெல்மணிகள் வீடுயர நேரிழையார் பொங்கலிட
நல்லுழவர் காளைக்கு நன்றிசொல்வர் - வெல்லுபுகழ்
செங்கதிரோன் புன்னகைக்கச் சித்திரமாய் மாக்கோலம்
பொங்கல் வருகின்ற போது.

(வெளியானது 'மீண்டும் கவிக்கொண்டல்" பொங்கல்மலர்-சனவரி 2014 பக்கம் 62.வரிசை எண்.71. மலர் 22, இதழ் 8)

முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்

அளப்பரிய கல்வியார் ஆழ்வார்கள் பாட்டில்
உளமகிழ்ந்து செய்தார் உரைநூல் - விளக்கி
அருந்தத் துவத்திலும் ஆழ்பொருள் சொல்வார்
இராவ கமலக்கண் ணன்.

(15-10-2013 இரவு 9 மணி-காஞ்சிபுரம் டாக்டர் ஆர்.வி.கமலக்கண்ணன்,எம்.ஏ., பி.எட்.,பிஎச்.டி அவர்களைப் பற்றி)

பார்த்தசாரதி கோயில் - திருவல்லிக்கேணி

பார்த்தனுக்குச் சாரதியை பக்தர்கட் கெம்பிரானை
ஆர்த்திடும் சங்கம்நல் ஆழியானை - கூர்த்தமதி
தந்தருள் வானைத் திருவல்லிக் கேணியில்
வந்தனை செய்தேன் உவந்து.

(19-9-2013  வியாழன்  நண்பகல் 12.10 மணி. முழுமதி. பார்த்தசாரதி கோயில்)

யாவர்க்கும் பொங்கல் இனிது

செங்கதிரோன் புன்னகைக்க செங்கரும்பு மஞ்சளிஞ்சி
எங்குலப் பெண்டிர்தைப் பொங்கலிட - பொங்கிவரும்
காவிரியில் வெள்ளம் கரைபுரண் டோடினால்
யாவர்க்கும் பொங்கல் இனிது.

(27-12-2012 காலை 10.10 மணி)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" பொங்கல் மலர்-2013)

பாரதியார்

பாரதத்தைப் பாப்பாவைப் பாஞ்சாலி யைத்தமிழை
வீரமிகு சொற்களிலே பாடியவன் - ஈரமுடன்
எல்லா உயிர்களையும் இன்பமுற நேசித்த
வல்லான்நம் பாரதியை வாழ்த்து.

(எழுதியது 1-8-2014 இரவு 11.30 மணி, லாஸ் ஏஞ்சல்ஸ்)

சுதந்திரமே வாழ்வில் சுகம்

கூண்டுக் கிளியான கோடீஸ் வரனினும்
ஆண்டியாய் ஊர்சுற்றல் ஆனந்தம் - யாண்டும்
இதந்தரும் ஆன்மாநல் இன்புறும் என்றும்
சுதந்திரமே வாழ்வில் சுகம்.

(எழுதியது 9-7-2014 காலை 10.58 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)
(வெளியானது "அமுதசுரபி" ஆகஸ்ட் 2014 பக்கம் 54)

ஈற்றடி தானே இனிப்பு (2-ஆம் பரிசு)

ஆவலுடன் பாவலர்கள் அற்புதமாய் வெண்பாவில்
யாவரும் போற்ற எழுதுதற்கும் - தேவைமிகு
மாற்றுக் கருத்து மனங்களில் தோன்றுதற்கும்
ஈற்றடி தானே இனிப்பு!

(எழுதியது 31-5-2014 பிற்பகல் 2.35 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)
(வெளியானது "அமுதசுரபி" ஜூலை 2014.  பக்கம்.56-இரண்டாம் பரிசு பெற்றது)

வாக்களிப்போம்

அயர்விலாச் சேவையால் அல்லலுறு மக்கள்
துயர்துடைப் போனேநற் தொண்டன் - உயர்வான
நோக்கத்தில் பாடுபடும் நல்லவர்க்கு நாமெல்லாம்
வாக்களிப்போம் சாவடிக்கு வா.

(எழுதியது 2-4-2014 மாலை 5.25 மணி)

வேறெங்கும் உண்டோ

மேன்மைதிகழ் ஆசான்கள் மெச்சுபுகழ் சீடர்கள்
கோனுயர நல்லறம் கூறமைச்சர் - ஆன்மிகச்
சாறளிக்கும் தத்துவச்சான் றோரத் தமிழகம்போல்
வேறெங்கும் உண்டோ விளம்பு.

(எழுதியது 3-3-2014. மாலை 5.15 மணி)
( வெளியானது "அமுதசுரபி" ஏப்ரல் 2014 பக்கம் 69)

காரம் இனித்திடும்

பணியாரம் கேசரி பால்கோவா லட்டு
துணையாய் அதிரசம் பொங்கல் - மணமுடன்நா
நீரூறும் ஜாங்கிரி  நெய்யல்வா இப்பல
காரம் இனித்துடும் காண்.

(எழுதியது 3-2-2014)

புத்தகமே சொத்து

செல்வமிகச் சேர்க்கும் சிறந்தநற் கல்வியதைப்
பல்வகையாம் நூல்கள் பரிந்தளிக்கும் - நல்லுலகில்
எத்திசையும் வெல்லுபுகழ் ஏற்றமது தந்திடும்
புத்தகமே சொத்தாம் புகல்.

(வெளியானது "அமுதசுரபி" ஜனவரி 2014 பக்கம் 65)

ஆண்டாள் - அமுதசுரபி தீபாவளி மலர் அட்டைப் படம்

அரங்கனே பின்னாளில் ஆள்வானென் றன்றே
கரங்களில் சக்கரமும் சங்கும் - விரந்தருள
பாத மணிஇசைக்கப் பொன்னூஞ்சல் ஆடிடும்
கோதைக்குக் கோது கலம்!

(நவம்பர் 2013 அமுதசுரபி தீபாவளி மலர் அட்டைப் படம் ஓவியர் கோபுலு வரைந்தது)

தீபாவளி மலர் - அமுதசுரபி

தீபா வளிமலரில் தித்திக்கும் பாவகைகள்
வாபா ரெனும்வண்ண ஓவியங்கள் - பாபச்
சுமைதீர்க்கும் ஆன்மிகச்  சொல்வளங்கள் மின்னும்
அமுத சுரபியில் உண்டு.

(அமுத சுரபியிவ் வாண்டு) (வெளியானது "அமுதசுரபி" டிசம்பர் 2013.பக்கம்.74)

பேரின்பச் சொற்கடல் பாரதி

கண்ணனை சக்தியைக் கர்த்தரை அல்லாவை
வண்ணமுடன் பாடும் வரகவி - எண்ணமெலாம்
நாட்டு விடுதலையே! நம்பெண்டிர் கல்வியிலும்
நாட்டமுறச் செய்தார் நன்று.

(வெளியானது "அமுதசுரபி" செப்டம்பர் 2013 பக்கம் 47)

வ.வு.சி.

வக்கீல்தாம் கப்பலை வாங்கினார் வெள்ளையரால்
செக்கிழுத்தார் நொந்தார் சிறைதனில் - தக்கபல
நூல்களைச் செய்தார்தம் நுண்ணறிவால் வ.வு.சி.
போலொருவர் உண்டோ புகல்.

(வெளியானது "அமுதசுரபி" ஆகஸ்ட் 2013 பக்கம் 19)

விவேகானந்தர் ( 3-ஆம் நிலை)

குமரி முனயில் கொளுந்துவிடும் ஞானம்
நமக்கு வழிகாட்டும் நாளும் - அமெரிக்கர்
விந்தைத் துறவியெனும் நம்விவே கானந்தர்
சிந்தனையை நீசிரமேற் கொள்.

(வெளியானது "அமுதசுரபி" ஜூலை 2013. மூன்றாம் நிலையில் தேர்வு.2)

'அன்பு' எனத் தொடங்கி 'அறம்' என முடியும் வெண்பா(3-ஆம் நிலை)

அன்பாய் நடத்தல்நல் லாதரவாய்ப் பேசிடுதல்
துன்பம் வருங்கால் துயர்துடைத்தல் - மண்ணுலகில்
எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணிடுதல் மூத்தோரை
செவ்வையாய்க் காத்தல் அறம்.

(வெளியானது "அமுதசுரபி" ஜூன் 2013 பக்கம் 53. மூன்றாம் நிலையில் தேர்வு-1)

மனிதனாய் மாறு

அன்னையைத் தந்தையை ஆசானை நண்பனை
என்றுமே போற்றூம் இயல்புகொள் - பொன்போல்
கனிகாய் மலர்தரும் காடுகள் காப்பாய்
மனிதனாய் நீமீண்டும் மாறு.

(வெளியானது "அமுதசுரபி" மே 2013 பக்கம் 67)

வன்முறையைத் தீர்க்கலாம் வா

சாதிமத பேதங்கள் சண்டைகள் சச்சரவு
வேதனைதான் ஏதும் விதியாமோ - தீதிலா
இன்சொல் விவேகானந் தர்வழியைப் பின்பற்றி
வன்முறையைத் தீர்க்கலாம் வா!

(வெளியானது "அமுதசுரபி" மார்ச் 2013 பக்கம் 64)

இம்மாதம் நாள் குறைதல் ஏன்?

மாதத்தில் முப்பதுநாள் மாடாய் உழைத்தால்தான்
தேதியில் சம்பளம் தந்திடுவார் - சோதனையாம்
சும்மா கொடுத்ததாய்ச் சொல்லிப் புலம்புகிறார்
இம்மாதம் நாள் குறைதல் ஏன்?

(வெளியானது "அமுதசுரபி" பிப்ரவரி 2013 பக்கம் 55)

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

உயிரின் விலை இதுதானா?

பானை உடைஞ்சிருச்சு பாலெல்லாம் கொட்டிருச்சு
தீநாக்கு வந்தல்லோ தெய்வத்தைத் தீண்டிருச்சு
தோணியிலே போனமச்சான் துள்ளி வருவார்னு
ஆனமட்டும் காத்திருந்தேன் அய்யோன்னு போனாரே!

மத்திமீன் வலைவீசி மலையளவு கிடைக்கு மின்னார்
மத்தியிலே சுட்டுப்புட்டான் மனம்ஒடைஞ்சு போனதையா
காக்காமீன் கெளுத்திமீன் கடலெல்லாம் கெடைக்கு மின்னார்
சாக்காடு வந்ததையா சரமாரி குண்டுகளா1

கெண்டைமீன் போல கிளியேஉன் கண்ணுன்னு
மண்டபத்துத் தொறப்பக்கம் மனசாரச் சொன்னவனே
கண்டாங்கிச் சீலையிலே கருப்பாயி ஒம்போல
உண்டாடி பொண்ணுகன்னு ஊரறியச் சொன்னவனே!

பிச்சிப்பூ வாங்கிவந்து பிரியமுடன் சூட்டிவைப்பே
கச்சத்தீ வடுத்த கடும்பாவி சுட்டுப்புட்டான்
சின்னஞ் சிறுகளை சீரழிய விட்டுப்புட்டு
சிலோன்காரன் உன் ஒடம்பை சல்லடையாய் துளைச்சுட்டான்!

சண்டைக்கு நான்போறேன் சட்டுன்னு வெட்டிடுவேன்
தொண்டைச் சங்கறுத்துத் தொடைரெண்டை ஒடைச்சிடுவேன்
கக்கத்தில்  அரிவாளைக் கணக்காநான் எடுத்துவச்சேன்
சர்க்காரு விசயமுன்னு சாதிசனம் தடுக்குதையா!

மீன்பிடிக்கப் போறவுக மீனோட திரும்பட்டும்
மின்னட்டாம் பூச்சிகளா பிள்ளைகுட்டி காத்திருக்க
நான்பட்ட கஷ்டமெல்லாம் நாளக்கிப் படவேண்டாம்
நாட்டாரே ஏழைக்கு நல்லவழி சொல்லுமையா!

கடல்மேல் பிறந்து கண்ணீரில் மிதக்கும் மீனவர், சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையை எண்ணி வேதனையோடு புலம்பித் தவிக்கும் மனக்குமுறலை வெளிப்படுத்தும் வீரியக் கவிதை......

என்று பாராட்டிக் கட்டம் கட்டி வெளியிட்டது "மாலை முரசு" நாளிதழ்.         தேதி  9-12-2000)

சனி, 2 ஆகஸ்ட், 2014

இளந்தேவன் தலைமை-வானொலி

சென்னை நிலையத்தின் சீர்மிகு வானொலி
பொன்போல் சுதந்திரத்தைப் போற்றிடும் - நன்னாள்
உளமாரப் பாவரங்கை ஓங்கி அமைத்தார்
இளந்தேவன் பாத்தலைமை ஏற்று.

(15-8-2011 இராணி மேரிக் கல்லூரி-வானொலி சுதந்திர தினச் சிறப்புக் கவியரங்கில் நான்)

காந்தியடிகள் வழியில் நடப்போம்

சத்தியமே வெல்லுமென்றும் சான்றோர் அறவழியில்
இத்தரையில் எல்லாம் இயலுமென்றார் - புத்துலகில்
சாந்தமுடன் எந்நாளும் சச்சரவொன் றில்லாது
காந்திவழி நாம்நடப்போம் வா.

(5-9-2012 காலை 9.45 மணி 407 லா சே)
(வெளியானது "அமுதசுரபி" அக்டோபர் 2012)


கலைமாமணி வாசவன் அவர்களுக்கு

பால கிருஷ் ணன்பா பரிசுக் குரியதென
ஞால முணர்ந்தநம் வாசவனார் - சீலமுடன்
தேர்ந்தெடுத்தார் அன்னார் சிறப்புறு கைகளோ
ஓர்ந்தே எழுதும்நல் ஊற்று.

(7-9-2012 மாலை 6.15 வீடு)
(உலகத்தமிழ் எழுத்தளர் சங்கம் இலக்கியப் போட்டியில் கவிதைக்கு 2-ஆம் பரிசு பெற்றேன்)

வெண்பா - மலரின் பெயரால் தொடங்கல்(-2-ஆம் பரிசு)

மல்லிகை முல்லை மருக்கொழுந் தேயெனச்
சொல்லியே விற்கும் சிறுமிதான் - ஒல்லையில்
வீடு திரும்பித்தன் பாடம் படித்திட
நாடும் அவளுளம் நன்கு!

("அமுதசுரபி" ஆகஸ்ட் 2012-  2ஆம் பரிசு பெற்றது.)

வெண்பா - கனியின் பெயரால் தொடங்கல்

நாவல் பழத்தை நறுநெல்லி நற்கனியை
ஆவலுடன் உண்டநம் ஒளவையார் - மேவுதமிழ்
சேயோனோர் மாங்கனிக்காய் சென்றுமலை நின்றவுடன்
வாயினிக்கப் பாடியழைத் தார்.

(9-8-2012 இரவு 10.20 & 10.8.2012 காலை 9.25)
(வெளியானது "அமுதசுரபி" செப்டம்பர் 2012)

காளிகாம்பாள்

வீட்டினில் சோறிட மறுத்தாள் மகனோ
நீட்டிய கைகளில் பணந்தர மறுத்தான்
ஈட்டிய பொருளெனக் கிலையே காளியுன்
வீட்டினில் மதியம் உணவிடு தாயே.

(31-8-2012 காலை 11.5காளிகாம்பாள் கோயில்)

கையிலே காசில்லாக் கால்

சொந்தமும் பந்தமும் சுற்றமும் நட்புமே
வந்துனைச் சூழும் வசதியெனில் - நொந்தழநீ
பையவே சென்றிடுவர் பாரா முகமாயுன்
கையிலே காசில்லாக் கால்.

(29-8-2012  பிற்பகல் 3.50 407 லா சே)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" செப்டம்பர் 2012)

புரந்தர தாசர்

கணிகை புரந்தரியின் கானமஷி வீணை
மணியொலிக்கக் கண்ணனின் ஆட்டம் - கணப்பொழுதில்
நேசமிகு வேங்கடனைக் கண்ட ரகுநாதர்
தாசன் புரந்தரி யானார்.

(25-8-2012 மாலை 3.45 சனி. வீடு)
(இன்று சனிக்கிழமை திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய கண்ணனின் கதைகள். ஆன்மிக மலர்.தினமலர்)

நீதி தவறாமல் நில்

பொய்ச்சாட்சி சொல்லல் புறந்தள்ளல் வேண்டாரை
'பை'நிறைந்த பின்னரே தீர்ப்புறைத்தல் - அய்யகோ
போதனைகள் செய்யாது பொற்கைத்தென் பாண்டியன்போல்
நீதி தவறாமல் நில்.

(26-7-2012 வியாழன். இரவு 9.50 வீடு.-புத்தரைபோல் என்றுமே எனவும் எழுதலாம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" ஆகஸ்ட் 2012)

உயிர்ப்பலி வேண்டாம்

அன்பே வடிவான ஆண்டவன் எவ்வுயிரும்
கொன்று படைக்க விரும்பிடான் - என்றும்
கடவுள் பெயர்சொல்லிக் காவு கொடுப்போர்
அடம்பிடிக் காமை அறம்.

(26-7-2012 நண்பகல் 12.50 மணி 407 லா சே)
(வெளியானது 'முல்லைசரம்")

கன்னியாகுமரி பகவதி அம்மன்

குமரி முனையில் குளிர்ச்சியாய் நின்றே
நமது குறைகளைத் தீர்ப்பாள் - அமுதாய்
அகவை முதிர்ந்தோர்க்கும் ஆறுதல் நல்கும்
பகவதி அம்மனைப் பாடு.

(18-7-2010 மாலை 6.40 கன்னியாகுமரி-கோயில்)

செல்வர் அமைதியுறார்

அன்றாடம் காய்ச்சிகள் அல்லலின்றித் தூங்கிடுவார்
என்றும் உழைத்துண்பர் ஏற்றமுடன் - குன்றனைய
செல்வம் படைத்தோர் சிறிதும் அமைதியுறார்
பல்வகையில் தொல்லை அவர்க்கு.

(28-6-2012 காலை 10.30 மணி 407 லா சே)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" சூலை 2012)

பாவலர் புரட்சிதாசன்

இயலிசை கூத்து திரைக்கா வியத்தில்
உயர்தனிப் பேற்றை உடையார் - அயர்ந்தெங்கும்
புண்படப் பேசாப் புரட்சிதா சன்போன்று
பண்பாட்டைக் காக்கப் பழகு.

(28-4-2012 407 லாசே. புரட்சிதாசன் மறைவு-27-4-2012)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" ஜூன் 2012 பக்கம் 30)

திருக்குறள் தேசியநூல்

எல்லாப் பொளும் இதனுள் அடக்கம்
சொல்லாச் செய்தி ஏதும் இல்லை
திருக்குறள் நமது தேசிய நூலெனும்
கருத்தை மறுப்பார் எவரும் இலரே.

(26-6-2012 காலை 1.30 மணி 407 லா சே)
(வெளியானது "கண்ணியம்" ஆசிரியப்பாப் போட்டி. ஆகஸ்ட் 2012)

உரலும் குரலும்

உரலில் பிணைத்தாள் ஒருதாய் இனிய
குரலால் பிணைத்தாள் ராதை - இருவர்க்கும்
கட்டுப்பட் டுக்கிடந்த கண்ணன் கதைகளை
இட்டமுடன் கேட்போம் இனிது.

(23-6-2012 சனிக்கிழமை மாலை 4.25 மணி. 407 லா சே. lawn bench)
(குறிப்பு:  இன்று தினமலர் ஆன்மீக மலரில்"கண்ணன் கதைகள்" என்னும் தொடரில் அக்கரையில் ஒரு முனிவர் என்ற தலைப்பில் அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியதன் தாக்கம்)

மூப்புநோய்

எண்ணம் தடுமாறும் இல்லாத் துயர்வரும்
உண்ணப் பிடிக்கா துறங்கவும் - எண்ணிலாச்
சொத்தும் பிறர்க்கேகும் சோர்வே உடன்சூழும்
இத்தரையில் மூப்புநோ யால்.

(21-6-2012 வியாழன். காலை 10.40 மணி. 407 லா சே)
(வெளியானது "முல்லைச்சரம்" ஜூலை 2012)

வெண்பா "அ" வில் தொடங்கி "ன்" இல் முடிதல் -3 ஆம் நிலையில் தேர்வு

அமுத சுரபி கலைமகள் தேவி
குமுதம் இலக்கியப் பீடம் - எமதிதழ்கள்
கண்ணியம் குங்குமம் கல்கி கவிக்கொண்டல்
எண்ணி லடங்கிடாத் தேன்.

(வெளியானது "அமுதசுரபி" ஜூன் 2012.  3-ஆம் நிலை)

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

அன்பே அமுது

செல்வமும் கல்வியும் சீர்மிகு வேலையும்
எல்லா நலன்களும் ஏற்றிருதும் - மெல்லியலாய்
பொன் தந்தும் கிட்டாது பூமியினில் நல்லவர்கள்
அன்பொன்றே நெஞ்சின் அமுது.

(10-10-2006 பிற்பகல் 12.05 மணி. அலுவலகம்)

சீர் தூக்கிச் செய்க சிறப்பு

பிறப்பினை செல்வத்தைப் பெற்றநல் வாழ்வைக்
கருத்தினில் கொண்டிட வேண்டா - வருத்தமாய்
யார்வரினும் இன்னல் இனிது களைவோர்தம்
சீர்தூக்கிச் செய்க சிறப்பு.

(5-6-2006 காலை 4.55 மணி. வீடு)

நல்லி குப்புசமிச் செட்டி

பட்டைப் புகழவா பாத்திரத்தை நோக்கிநல்
துட்டைக் கொடுக்குங்கை போற்றவா -மட்டிலாக்
கல்வி இலக்கியங்கள் கண்போல் காத்திடும்
நல்லியின் தொண்டென்றும் நன்று.

(11-11-2011 மாலை 3.15 மணி)

மூத்தோர் சொல் கேள்

அறிவினால் பெற்ற அனுபவத்தால் பண்புச்
செறிவினால் மூத்தோர் சிறந்தார் - பொறுமையாய்
அன்னார் அறிவுரையை அப்படியே ஏற்றிடில்
எந்ந்நாளும் இன்பம் இனிது.

(19-4-2012 வியாழன் .பகல் 11.59 மணி.லா.சே.407)
(வெளியானது "முல்லைச்சரம்" மே 2012)

மதுவிலக்கு

கூலி முழுதும் குடித்தே கரைத்திடுவார்
பாலின்றிப் பிள்ளை பசிநோகும் - சோலைப்
புதுமலராய் மாறிடப் புத்திமதி சொல்வீர்
மதுவிலக்கே மானிடரின் மாண்பு.

(9-4-2012 திங்கள் காலை 11 மணி. 407 லா.சே)
(வெளியானது "அமுதசுரபி" மே 2012)

மூப்பில் எச்சரிக்கை

பாடுபட்டுச் சேர்த்த சொத்தைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
நாடிவரும் சொந்தங்கள் நம்பாதே - கேடுகெட்ட
மக்களுனைத் தள்ளிடுவார் மண்ணுக்குள் மூப்பினிலே
எக்கணமும் எச்சரிக்கை கொள்.

(16-3-2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி. லா.சே.407)
(வெளியானது "முல்லைச்சரம்" ஏப்ரல் 2012)

அறநெறி வழுவாதே

உண்மை உழைப்புநல் ஊதியம் தந்திடும்
கண்ணெனப் போற்று கடமையை -திண்ணமாய்
என்றும் அறநெறி யில்வழு வாதுநீ
குன்றாச் சிறப்போடு வாழ்.

(16-3-2012 காலை 4.30 அம்ணி. வீடு)
(வெளியனது "நம் உரத்தசிந்தனை")

ஆனந்தத் தாண்டவம்

திரைகடல் வழங்கிடும் சங்கொலி முழங்கிட
              தேவர்கள் இசைபாட
   தித்தித் தோம்தம் தம்தம் எனமத்
               தள இசை நந்திதர

தரையினில் அடிபர வாதது போல்மணிச்
               சதங்கைகள் துதிபாடத்
     தகதக வெனுமொளி விரிசடை பரப்பிடத்
               தாவிக் குதித்தாடி

இருகரம் இணைந்துபி ரிந்துவி ரல்களில்
            எழும்பிடும் முத்திரைகள்
     இப்புவிபேசிடும் அத்துணை மொழிகளும்
              இயம்பிடும் மலர்விழிகள்

அரனுடன் உமையவள் அபிநய சுந்தரி
             ஆடிடும் எழிற்கோலம்
      அடியவர் மனந்தனை ஆனந்த வாரியில்
              ஆழ்த்திடும் தாண்டவமே!
                                                                         - அரிமா இளங்கண்ணன்

(14-3-2012 காலை 4.40 வீடு. நிறைவு மாலை 5.47.LC 407)

மனம் தளராதே

மதயானை போன்றதொரு வேகத்தி லிரவுபகல்
             மாடாக உழைத்திட்டனை
    மக்களும் அன்பொழுகும் மனைவியும் பக்கத்தில்
             மெச்சவாழ்ந் திடஎண்ணினாய்

விதியதோ வலியதுன் குடும்பத்தி லுள்ளவருன்
           உழைப்பினை உறிஞ்சிட்டனர்
    உனக்கென்றே எதனையும் சேமித்தி டாமலே
           வீடுவீ  டென்றலைந்தாய்

புதுவாழ்வு மாடிமனை பெண்டாட்டி பிள்ளைகள்
           போம்வழியில் காணவில்லை
     பொய்யான உலகத்தை மெய்யாக நம்பியே
            பொருளெலாம் இழந்திட்டனை

இதுதான் உலகமென் றறிந்துகொள் நண்பனே
             ஏன்கவலை கொள்கின்றனை
      இருப்பதைக் கொண்டுமன வலிமையுடன் நன்றாக
             ஏற்றமுடன் வாழ்ந்திடுகநீ!

(27-2-2012 மாலை 6.50 மணி. அலுவலகம்)