சனி, 26 செப்டம்பர், 2015

புரசை வரதராசப் பெருமாள் - 12

இன்று புரட்டாசி ஏற்ற சனிக்கிழமை
என்றும் பெருந்தேவி இன்பமுடன் - நன்றாய்
வரதராசன் சேர்ந்துறைய வற்றா தருளும்
புரசைவாக் கத்திற்குப் போ!
                                                                         - அரிமா இளங்கண்ணன்
(20-9-2014 சனி இரவு 7 மணி - கோயில்) (இடுகை 26-9-2015 சனி மாலை
6 மணி)

ஏமாந்து நிற்கின்றேன் யான்

பாலொழுகும் தேன்தமிழில் பாக்கள் படைத்திடவும்
நூலெழுத வும்வைத்தாய்  நுட்பமுடன் - மாலவனே
மாந்தர்தம் நெஞ்சின் மறைபொருள் ஓராதே
மாந்து நிற் கின்றேன் நான் இன்று!
(ஓராது + ஏமாந்து)             அரிமா இளங்கண்ணன்
(18-9-2014 செவ்வாய் காலை 4.30 மணி. இடுகை 26.9.15 சனி
மாலை 5-55)

மாரித்தாய் - 11

என்னைப் புரிந்துகொன்(டு) என்தேவை தானறிந்து
பொன்னைப்போல் காக்கஇப் பூமியில் - அன்னையே
நீதான்  இருக்கின்றாய் நிச்சயம் இக்துண்மை
வாதாயே என்மாரித் தாய்!
                                                              - அரிமா இளங்கண்ணன்
(16-9-2014 செவ்வாய் காலை 5-40 மணி.)
(இடுகை 26.9.15 சனி மாலை 5.35)

செயலின் விளைவேதான் தீர்ப்பு

அவரை விதைத்தால் அறுவடைவே  றாமோ
எவர்க்கும் வினைப்பயன் ஏலும் - தவறாய்
முயலுறங்க ஆமை முதல்வந் ததுபோல்
செயலின் விளைவேதான் தீர்ப்பு!
                                                                                   - அரிமா இளங்கண்ணன்
(15-9-2014 பகல் 12.55 மணி.திங்கள்  வீடு)
(வெளியானது “உரத்தசிந்தனை” தீபாவளி சிறப்பிதழ்-அக்டோபர் 2014
பக்கம் 59)

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

மாரி அம்மன் - 10

 நடக்க முடியாமல்  நால்லஎன் கால்கள்
முடக்கிக் கிடத்தும் முதுமை - சடக்கென
என்கால் மரக்காமல் இன்றருள் மாரித்தாய்
உன்னை மறப்பேனோ நான்?
                                                                     - அரிமா இளங்கண்ணன்
(8-9-2014 காலை 7.30 மணி. தாணாத் தெரு சோலையம்மன்
கோயில் பக்கம்)(இடுகை 17-4-2015 பிற்பகல் 3.31)

பெருமாள் - பெருந்தேவி (புரசைவாக்கம் வரதராசப் பெருமாள் கோயில்-11)

பெருமாளென் தந்தை பெருந்தேவி தாயார்
அருந்தமிழில் ஆயிரம்கற் பித்தார் - பெருந்துயரம்
யாதொன்றும் வாராமல் என்னையும் காத்திடுவார்
ஓதிடுவேன் நாமங்கள் ஓர்ந்து!
                                                                          - அரிமா இளங்கண்ணன்
(யாதொன்றும் நேராமல்)- (6-9-2014 காலை 7 மணி.தாணாத் தெருவில்
 நடந்து செல்லும்போது) (இடுகை 17-4-2015 பிற்பகல்3.19)

மாரியன்னை - 9

 நல்ல படியாக  நானிங்கே முன்போல
எல்லாம் அனுபவிக்க ஏற்றருள்வாய் - பல்விதமாய்
உன்புகழை எந்நாளும் ஓதிடும் ஏழையின்
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
                                                                     - அரிமா இளங்கண்ணன்
(8-9-2014 அதிகாலை 3.30) (இடுகை 17-4-2015 பிற்பகல் 3.10)

அண்ணல் காந்தி

அரிச்சந்தி ரன்பாதை ஆய்தம் அகிம்சை
தரிப்பதோ நாலுமுழ வேட்டி - இயில்
பொக்கைவாய் கைராட்டைப் பொன்வேள்வி காந்தியார்
மக்கட் பெருந்தலைவ ராம்!
                                                                     - அரிமா இளங்கண்ணன்
(3-9-2014 இரவு 12.30) அமுதசுரபி அக்டோபர் 2014 வெண்பாப் போட்டியில்
3 ஆம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா-1)( இடுகை 17-4-2015 பிற்பகல்
2-58)

திறந்திடுவாய் (புரசை வரதராசப் பெருமாள் கோயில்) -10

பூட்டிக் கிடந்தாலும் பொன்மேனி நெஞ்சத்தில்
நாட்ட முடனுண்டு நன்றாக - கேட்ட
வரமருளும் எம்வரத ராசரே! சற்றே
திறந்திடும் வாயிற் கதவு!
                                                          - அரிமா இளங்கண்ணன்
(1-9-2014 மாலை 7 மணி- கோயில்)(இடுகை 17-4-2015 பகல் 2.47)

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

என்னாகும் இல்வாழ்க்கை?

ஆணைப்போல் சம்பளம் வாங்குகிறேன் என்றேநீ
வீணாய் உறவை ஒதுக்காதே - நாணமின்றிச்
சொன்னாலும் கேளாய் சுயபுத்தி இல்லாமல்
என்னாகும் இல்வாழ்க்கை எண்ணு!
                                                                                      - அரிமா இளங்கண்ணன்
(வெளியானது: “மீண்டும் கவிக்கொண்டல்” பிப்ரவரி 2015.பக்கம்.30)
(இடுகை.24-2-2015. 2.06 மணி)

வறுமைப் பிணியை விரட்டு

  நாட்டினில் எல்லோரும் நல்ல பணிசெய்தே
 வீட்டினைக் காக்க விழைகின்றார் - காட்டும்                          
 திறமை அறிந்தவரைத் தேர்க, அரசே!
 வறுமைப் பிணியை விரட்டு!
                                                                      - அரிமா இளங்கண்ணன்
(எழுதியது: 14-1-2015.புதன். இரவு.9.15 மணி.வீடு) (இடுகை 24.2.2015. 1-55 மணி)
 

மாரியம்மன் - 8

எந்த நிலையிலும் என்மாரி யம்மாநான்.
உந்தன் திருவடியை உன்னியே - நொந்த
வினைதீர்த்து வாழவே வேண்டுவன் நீயுன்
கனிவிழியால் என்னையும் கா!
                                                                        - அரிமா இளங்கண்ணன்
(30-1-2015 .காலை 4.45 மணி. வீடு) (இடுகை;24-2-2015 .1.45 மணி)

திங்கள், 23 பிப்ரவரி, 2015

வரதராசப் பெருமாள் கோயில் - 9

பெருந்தேவித் தாயுன் பெருமைதனைப் பேசத்
திருவனந்தாழ் வானாலும் தீரா - இருந்தமிழில்
பாப்பாடி உந்தன் பதம்பணிவேன் என்னையும்
காப்பாற்று முன்னருட் கண்!
                                                                 - அரிமா இளங்கண்ணன்
(காப்பாற்றும் உன் அருட் கண்; நின் அருட்கண்; திருவனந்தாழ்வானாலும் ஆமோ?) (எழுதியது: 29-1-2015. காலை.4.30 மணி. வீடு) (இடுகை:24.2.2015.பிற்பகல்.1.16 மணி)

மாரியம்மன் - 7

உன்னை மறப்பேனோ உன்பிச்சை என்வாழ்வாம்
அன்னை உனக்கேஎன் ஆருயிரும் - சொன்ன
படிகேட்கும் சுந்தரியே! பாசமிகு மாரீ!
அடிபணிந்தே உய்வேனின் நாள்!
                                                                            - அரிமா இளங்கண்ணன்
(20-1-2015. மாலை 4.25 மணி. வீடு) (இடுகை:24-2-2015  பிற்பகல்.1.06. மணி)

தகைசால் தருண் விஜய்

தில்லியிலே நம்மவர்கள் திக்கற்றுப் போனாரோ
வெல்லு தமிழுக்காய் என்செய்தார்? - பல்வகையில்
செந்தமிழைப் போற்றும் தருண்விஜய் மாமனிதர்
நம்தமிழர் என்றிடுவோம் நாம்!
                                                                       - அரிமா இளங்கண்ணன்
(17-1-2015..சனி. இரவு.7.35 மணி. வீடு) (வெளியானது:”முல்லைச்சரம்” பிப்ரவரி.2015.பக்கம்.62) (இடுகை:24-2-2015 12.51 மணி) . 

புத்தாண்டு

பலவிதமாய்க் கொண்டாட்டம் பட்டொளியாய் வண்ணம்
நிலைமறப்பர் தம்கவலை நீங்கி - உலகத்தில்
எத்துணையோ பேர்மகிழ்ந் தின்பமுற ஆங்கிலப்
புத்தாண்டு தோன்றும் பொலிந்து!
                                                                              - அரிமா இளங்கண்ணன்
(16-12-2014 காலை 11.45. வீடு) (வெளியானது: “முல்லைச்சரம்” ஜனவரி 2015.பக்கம்.61) (இடுகை.24-2-2015 12.38மணி)

பத்துப் பொருத்தம்

சொத்து நகைபலவாய் சொந்தம் சிலரென்றால்
பத்துப் பொருத்தமும் பாங்கென்பார் - பத்தரை
மாற்றுங்கள் பெண்ணென்பார் மாற்றிடுவார் தட்டுகளைத்
தோற்றுவிழும்  நேர்மை துவண்டு!
                                                                        - அரிமா இளங்கண்ணன்
(9-11-2014.ஞாயிறு.மாலை 5 மணி. வீடு) (வெளியானது: “முல்லைச்சரம்”  டிசம்பர் 2014..பக்கம்.63. இடுகை.24-2-1015 . மணி 12.28

வியாழன், 5 பிப்ரவரி, 2015

தனக்குவமை இல்லாத் தமிழ்!

ஒற்றைக் கதிரவனாய் ஓங்கி உலகளக்கும்
கற்றவர்கள் போற்றும் கனியமுதாம் - மற்றோர்
இனக்கலப்பால் தன்னிலையில் என்றுமே மாறாத்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
                                                                       - அரிமா இளங்கண்ணன்
(1-1-2015.வியாழன்.இரவு.10  மணி.) .(”அமுதசுரபி”பிப்ரவரி,2015.பக்கம்.48.மூன்றாம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா.3) (இட்டது;சென்னை.5-2-2015.இரவு.11.20) 

வள்ளுவரைப் போற்றிடுவோம் வா!

காசினியில் எல்லோரும் காணும் பொதுமறைநம்
தேசமிக ஏத்தும் திருக்குறளாம் - மாசிலா(து)
உள்ளம் தெளிவடைந்தே உய்யவழி காட்டிடும்
வள்ளுவரைப் போற்றிடுவோம் வா!
                                                                           - அரிமா இளங்கண்ணன்.                                  (3-12-2014.இரவு.7.35 ) “(அமுதசுரபி-ஜனவரி,2015.பக்கம்.68)

                                       - 

மகாத்மாவைப் போற்றும் மனம்

அரிச்சந்தி ரன்பாதை ஆய்த மகிம்சை
தரிப்பதோ நாலுமுழ வேட்டி - சிரித்திடும்
பொக்கைவாய் கைராட்டைப் பொன்வேள்வி காந்தியார்
மக்கட் பெருந்தலைவ ராம்!

(3-9-2014.புதன்.இரவு.12.30. வீடு) (அமுதம்சுரபி”அக்டோபர்,2014.பக்கம்.46. மூன்றாம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா..2) (இட்டது.சென்னை-                    5-2-2015.இரவு.10.55)

பாரதியின் நற்புகழைப் பாடு

பாரதத்தைப் பாப்பாவைப் பாஞ்சாலி யைத்தமிழை
வீரமெழும் சொற்கவிதை பாடியவன் - ஈரமுடன்
எல்லா உயிர்களையும் இன்பமுற நேசித்த
வல்லான்நம் பாரதியை வாழ்த்து.

                     - அரிமா இளங்கண்ணன், லாஸ் ஏஞ்சல்ஸ்
(”அமுதசுரபி”செப்டம்பர்,2014.பக்கம்.48).

நாவடக்கம்

யாவையு மடக்கிடுதல்
மேவிய செயலாமே!
நாவினை யடக்கிடுதல்
சாவினை மடக்கிடுமே!

(வெளியானது:” நற்றமிழ்”- புதுச்சேரி-உ0ஙுரு(தை) 15-1-2004.பக்கம்.கக(11)
(வஞ்சித்துறை-7.புளிமா + புளீமாங்காய்).. இட்டது;சென்னை.5-2-2015.இரவு.10.35)


ஓங்கித் தழைக்கும் உலகு !

அன்புடன் நற்பொறுமை ஆன்ற உதவிகள்
உண்மை உழைப்புடன் பேரூக்கம் - என்றிவை
ஈங்குநாம் பெற்றிடில் இன்ப மழையினில்
ஓங்கித் தழைக்கும் உலகு!

(வெளியானது: ’’மீண்டும் கவிக்கொண்டல்’’ - அக்டோபர், 2003.பக்கம்.20-மலர்.12 .இதழ் .5.) . இடுகை .5-2-2015 இரவு.10.20. சென்னை
,