வியாழன், 28 ஜனவரி, 2016

பெண் என்னும் பெருந்தகை

அண்ணன் தம்பி அக்காள் தங்கை
கண்ணுக்கினிய கணவன் பெற்றோர்
உற்றார் உறவினர் ஊரார் அயலார்
சுற்றம் நட்பும் சூழ மகிழ்ந்து
கண்ணாய்க் கல்வியைக் கற்றுப் பகிர்ந்து
திண்ணிய நெஞ்சுடன் வாழ்வை அமைத்து
வீட்டையும் நாட்டையும் விளக்கொளி யாக்கும்
நாட்டம் கொண்டவள் பெருந்தகை யாமே!

(18.2.2015 புதன் காலை 11.25)
(இடுகை 28.1.2016 வியாழன் மாலை 5-14)

பாரதி போற்றிய பெண் (முதல் பரிசு )

தாய்மையும் வீரமும் தக்கநற் கல்வியும்
ஆய கலைகளில் ஆர்வமும் - நேயமாய்
சீரதிகம் பெற்றுச் சிறப்புடன் நிற்பவளே
பாரதி போஸ்னிய பெண்!

(இலக்கியச் சோலை. மார்ச் 2015.பக்கம் 85
வெண்பாப் போட்டி முதல் பரிசு )
(இடுகை 28.1.2016 மாலை 4.55)

புதன், 27 ஜனவரி, 2016

காவல்

பட்டப் பகலில் படுகொலைகள் குத்துவெட்டு
கட்டுப் படுத்தும் கருத்தின்றி - வெட்டியான்கள்
காவல் புரிதலெனும் கண்துடைப்பை இன்னுமோ
யாவர்தாம் நம்புவார்கள் இன்று?

(16.2.2015 ஞாயிறு பகல் 2.15)
(இடுகை 28.1.2016 பகல் 12.15)

திரு. இல.கணேசன் பிறந்தநாள் வாழ்த்து

அரசாங்கப் பணியில் இருந்தீர்கள்
     அன்புடன் சங்கம் அழைக்கக்
கரங்கோத்துப் பணிகள் செய்தீர்களா
     கட்டுப்பாட் டுடனே திகழ்ந்தீர்
உரங்கொண்ட அரசிய வாற்றில்
     உறுதியாய் நீந்த லானீர்
சிரம்போற்றும் 'பொற்றாமரை மரை'யைச்
     செதுக்கினீர் வாழ்க! வாழ்க!

      (வெண்பா)

நானிலம் போற்றிடவே நாற்பத்தைந் தாண்டுகள்
தானினிய சேவை தந்துவிட்டார் - தேனினிய
நற்றமிழ்ச் செல்வர் இலகணேச னார்பிறந்த
வெற்றித் திருநாளில் வாழ்த்து!

(16-2-2015 காலை 7.45)
(இடுகை 28.1.2016 பகல் 12.04)

திங்கள், 25 ஜனவரி, 2016

இயற்கை

காடழித்தோம் ஆழக் கடலகழ்ந்தோம் குன்றுடைத்தோம்
கேடுமிக வான்வெளிக்குக் கிட்டவைத்தோம் - பாடின்றி
ஓய்ந்திருக்கும் நல்லியற்கைக்(கு) ஊறுபல செய்திட்டால்
பாய்ந்துவரும் பேரழிவைப் பார்!
(14.2.2015 சனி இரவு 10 மணி)
(வெளியானது "முல்லைச்சரம்" ஏப்ரல் 2015 பக்கம் 63. சரம்49.மலர்9.தொடக்கம் 15.8.1966)

புரசை வரதராசப் பெருமாள் - 15

பல்லாண்டு பாடப் பரந்தாமன் இன்புற்றே
எல்லா நலமும் இனிதருள்வான்- தொல்லுலகில்
நாரா யணன்பாதம் நாளும் பணித்திட்டால்
வாராதே என்றும் இடர்.

(13-2-2015 வெள்ளி மாலை 6-40. கோவில் )
(இடுகை 25-1-2016.மாலை 7-05)

புரசை வரதராசப் பெருமாள் - 14

தந்தைதிருப் பல்லாண்டும் தம்கோதை ப
பாவவையும்
சிந்தை மகிழ்வுறவே செப்பிடுங்கால் - பந்தை
வரதரா சப்பெருமான் வற்றா தருளப்
புரசைவாக் கம்கோயில் போ!
(13-2-2015 வெள்ளி. மாலை  6.40. கோயில்)
(இடுகை 25.1.2016 திங்கள் மதியம் 3.29)