திங்கள், 28 ஜூலை, 2014

வரதராசப் பெருமாள் கோயில் - 7 - கோதண்ட ராமன்

தந்தைசொல் மிக்கஓர் மந்திரம் இலையென்று
         தரணிக்குத் தான்காட்டினான்
    தங்கமும் வைரமும் குவிந்தஅரண் மனைநீங்கித்
         தானேகி னான்கானகம்

எந்தக் குடியினில் பிறந்தாலும் அன்பினில்
           ஈடிணை  யில்லாதவர்
    என்னுடன் பிறப்பெனக் காட்டினான் குகனுடன்
           அனுமன்சுக் ரீவன்மகிழ

கந்தம் கமழ்குழல் சீதயை யன்றியோர்
           கன்னியை நோக்காதவன்
    கட்டியவ ளைக்காக்கச் சென்றனன் இலங்கையில்
            கடும்போரில் வெற்றிகண்டான்

இந்தமா நிலந்தன்னில் மனிதனாய் அவதாரம்
          எடுத்தவன் ராமனானான்
     ஏழுல கும்போற்றும் இராமனின் பெருமையை
          என்றைக்கும் போற்றிமகிழ்வோம்!

(31-3-2012 காலை 9.50 மணி.கோயில். இன்று ராமநவமி)


          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக