வியாழன், 31 ஜூலை, 2014

கருணையின் வடிவம் காளிகாம்பாள்

ஓய்ந்திருக்க நேரமிலை உனதுமுகம் எனதுயிரில்
              ஓயாது நிழலாடிடும்
     உயரிமயம் சென்னையினுள் வந்ததெனக் கமடேசர்
              உடனுறையும் தேவிநீயே

வாஞ்சையுடன் பெண்மணிகள் வாழ்வுமங் கலமாக்கி
            வரமருளும் செந்தூரமே
     வளையொலிக்கச் சேய்களுடன் அவராடும் போதினில்
            வாய்விட்டுச் சிரிக்கின்றவள்

காய்ந்துசரு காகியுடல் உதிர்கின்ற வேளையிலும்
           கறந்தபால் ஒத்தகருணை
    கடாட்சத்தி னாலுயிரை மீட்டுக் கொடுத்திடும்
           கனிவுடை அன்னைநீயே

ஊஞ்சலிலே ஆடியிவண் ஒய்யார மாய்மிளிரும்
          ஒப்பற்ற காளிகாம்பாள்
    உனதடியில் அனுதினமும் பணிபுரிந்தே எனதுயிரும்
          உய்யும்நாள் எந்தநாளோ!

(10-2-2012 வெள்ளிக் கிழமை கோயிலில் அம்மன் ஊஞ்சல் சேவை. எழுதியது மாலை 5.10 மணி. அலுவலகம்)
(வெளியானது "நம் உரத்தசிந்தனை" 28-ஆம் ஆண்டுவிழா மலர். 25.3.2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக