வியாழன், 10 ஜூலை, 2014

அருமைநாதன் சேவை அன்பு வெளிப்பாடே!

தாய்மண்ணைக் காப்பதற்குத் தம்பொருளை இன்னுயிரை
ஆய்ந்த்தறியா தீந்தவர்கள் ஆயிரம்பேர் - நோய்நொடியால்
கொட்டடியில் துன்புற்றும் கொள்கைமா றாமறவர்
தொட்டடியைப் போற்றிடு வோம்.

தோழாநம் தாய்மொழியின் தூய்மைத் திறங்காண
ஏழேழ் தலைமுறையின் நூல்கற்பாய் - பாழாய்ப்
பிறமொழியின் தாள்பற்றும் பேராசை வேண்டா
அறநூலாம் வள்ளுவமே மேல்.

மேல்மக்கள் கீழ்மக்கள் என்கின்ற பேதமிலை
நாலிரண்டு கற்றறிந்த நம்மவரில் - ஆல்போலப்
பாவலர்கள் சேர்ந்தமரப் பாய்விரிக்கும் பேரரசு
நாவலராம் நம்மருமை யார்.

யாரென்று நோக்காமல் இன் தமிழில் வல்லவரைப்
பாரறியப் பராட்டிப் போற்றிடுவார் - சீரார்
அருமைநா தன்சேவை அன்பு வெளிப்பாடாம்
பெருமிதமே பெற்றிட்ட  தாய்.

("தாய்மண்" இதழ் 27 ஆவது ஆண்டுமலரில் வெளியானது)
(எழுதியது 13.6.2007 மதியம் 1 மணி. வீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக