ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

கல்விச் சாலை

இளமையிலே பயின்றிட்ட என்னைப் போன்றோர்
         எழுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிக் கூடம்
உளம்மகிழ மேற்படிப்பைத் தருங்கல் லூரி
        உற்சாக  விளையாட்டோ டெவ்வி டத்தும்
களவற்ற மனக்கொண்ட பேரா சான்கள்
        கட்டுப்பாட் டொழுக்கமொடு கல்வி சொல்லி
அளவற்ற செல்வத்தை அள்ளித் தந்தார்
       அதனாலே செல்வங்கள் பலவும் பெற்றோம்!

கல்விக்கூ  டம்சிலரின்  காமக் கூடம்
      காசுபணம் பறிப்போரின் கொள்ளைக் கூடம்
பல்விதமாய் அரங்கேறும் வன்முறைகள்
     பாலியலில் பலவழியில் துன்புறுத்தல்
சொல்லிக் கொடுக்கின்ற குருவும் பாடம்
       சொல்லவந்த மாணாக்கர் பேதம் இன்றி
எல்லாத்தீச் செயல்களையும் புரிந்து வாழும்
        இடமாக மாறிற்றோ இந்நாள் ஐயோ!

கல்வியதன் ஒற்றிழந்தால் கலவி யாகும்
        களியாட்டம் ஆடஅல்ல கல்விக் கூடம்
நெல்விதைத்தால் நெல்கிடைக்கும் வயலில் ஆங்கே
       நிறைநிறையாய்ப் புற்களுமே முளைப்ப துண்டு
கல்லியதை முளையிலேயே பிடுங்கி விட்டால்
      களமெல்லாம் தானியங்கள் குவிந்து நிற்கும்
நல்லவழி காட்டுதற்கே கல்விச் சாலை
      நன்றாக இதனையவர் உணர்தல் வேண்டும்!

                                                                  - அரிமா இளங்கண்ணன்

(வெளியானது: "கவிதை உறவு". டிசம்பர் 2013. பக்கம்.16)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக