சனி, 23 ஆகஸ்ட், 2014

தாலாட்டு

ஊரார்தாம் மலடியென்றே தூற்றா வண்ணம்
     உற்றவர்கள் மனமகிழப் பெற்ற சேயைச்
சீராட்டிச் சிணுங்கிடுமுன் ஓடிச் சென்றே
    சிறுபசியும் தானுணர்ந்து மார்ப ணைத்துப்
பாராட்டிப் பலர்வாழ்த்த நல்ல நாளில்
    பாங்குடனே தொட்டிலிட்டுப் பேரும் வைத்தே
ஆராரோ ஆரிரரோ என்றே அன்னை
    அருமையுடன் தாலாட்டித் தூங்கச் செய்வாள்!

கருவிலேயே தாய்குரலைக் கேட்ட பிள்ளை
    காதினிக்கத் தாலாட்டுப் பாடும் போதில்
இருவிழிகள் தாமயரத் தாம ரைப்பூ
    இரவினிலே கூம்புதல்போல் உறக்கம் கொள்ளும்
அருகினிலே தாயிருந்து பாடும் பாட்டால்
    அழகுடனே முறுவலிக்கும் கனவு கண்டே
ஒருகாலை மேல்தூக்கி மடக்கி வைத்தே
     ஒயிலாகத் தூங்குவதோர் அழகின் எல்லை!

தான்பட்ட இன்னல்களைக் கதைபோல் சேர்த்துத்
     தாலாட்டுப் பாடிடுவாள் அத்தை மாமன்
தேன்சொட்டும் மலர்ச்செண்டால் அடித்தார் என்றே
     தித்திக்க உறவுசொல்லிப் பாட்டி சைப்பாள்
மீனாட்சி சிவன்முருகன் இராமன் தெய்வ
    மேன்மைகளைத் தாலாட்டில் விளக்கிச் சொல்வாள்
ஈன்றவளின் இன்னிசையே தாலாட் டாகும்
     இல்லத்தில் தாய்க்குலமே ஒலிக்கச் செய்வீர்!
                                             
                                                    - அரிமா இளங்கண்ணன்

(வெளியானது: "தமிழர் உலகம்" வேலூர். நவம்பர் 2013.விஜய ஆண்டு,
ஐப்பசி மாதம். பக்கம்,18-ஒஎ.)


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக