வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சொல்

தொழத்தக்க எம்தமிழர் எழுத்தும் தெய்வம்
       தூரிகையும் வணங்குகின்ற தெய்வம் என்பார்
எழுத்துக்கும் சொல்லுக்கும் ஏற்ற வாறே
       எத்துணையோ பொருள்களவை விந்தை யாகும்
அழுத்தமுடன் உச்சரித்தால் காணும் அர்த்தம்
       அதைவிடுத்தால் ஒற்றெழுத்தால் மாறிப் போகும்
பழச்சுவையாய்த் தேன்போன்ற சொற்கள் தம்மில்
       பட்டென்று கொட்டுகின்ற கொடுக்கும் உண்டு!

கண்ணகியின் சொல்லம்பு தீயாய் மாறிக்
      கவின்மதுரை நகரத்தை அழித்த தன்று
திண்ணமிகு வெற்றிகண்ட நந்தி வர்மன்
       தீச்சொற்கள் அறம்பாடத் தீயுள் மாய்ந்தான்
பண்ணிசையில் எழுகின்ற சொற்கள் வானில்
        பறந்துபெரும் மழையினையே தருதல் கூடும்
எண்ணத்தில் விளைகின்ற சொற்கள் எல்லாம்
        இதயத்தை வருடுவதாய் இருத்தல் வேண்டும்!

பேசாத சொற்களுக்குத் தலைவன் நீயே
        பேசிவிட்டால் அதற்கடிமை நீயே ஆவாய்
கூசாமல் பிறர்மீது குறைசொல் லாதே
       குலைகுலையாய்க் கனியிருக்கக் காயுண் ணாதே
நேசமிகு சொற்களுடன் நெருக்கம் கொள்வாய்
        நிகழ்ச்சிகளில் இலக்கியமாய் முழக்கம் செய்வாய்
பாசமுடன் தமிழ்மொழியின் உயர்வைப் பேசிப்
         பார்முழுதும் தமிழோசை பரவச் செய்வாய்!

                                                 - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "புதுகைத் தென்றல்" - ஜூன் 2013. பக்கம்.38 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக